Advertisement

“சென்னை பல்கலைக்கழகம்” “அண்ணா பல்கலைக்கழகம்”

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் “சென்னை பல்கலைக்கழகம்” “அண்ணா பல்கலைக்கழகம்” போன்றவை உலகப் புகழ் பெற்றவை. இங்கு பயின்ற மாணவர்களுக்கு இந்தியாவிலும் சரி, உலக நாடுகளிலும் சரி நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைத்து வந்திருக்கிறது. ஆனால் சமீப காலமாக தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்து வருகிறது என்பதை அடுத்தடுத்து நிகழும் பல்வேறு சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன. இதனால் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் நியமனத்தில் மிகுந்த வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற எண்ணம் கல்வியாளர்கள் மற்றும் கல்வி ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. க அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னால் துணை வேந்தர் டாக்டர் எம். அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட கல்வியாளர்கள், “துணை வேந்தர் நியமனங்களில் ஊழல் நடக்கிறது” என்றும் “பல்கலைக் கழக மானியக்குழு வின் விதிகளை முழுமையாக கடைப்பிடித்து துணை வேந்தர் நியமனங்கள் செய்யப்படுவதில்லை” என்றும் கூறி ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்துள்ளார்கள். அந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

“ராதாகிருஷ்ணன் கமிஷன்” “கோத்தாரி கமிஷன்” “ஞானம் கமிட்டி” “ராம்லால் பாரிக் கமிட்டி” “கஜேந்திரகட்கர் கமிட்டி” உள்ளிட்ட பல்வேறு கமிஷன்களும், கமிட்டிகளும் துணை வேந்தர் நியமனம் குறித்தும், துணை வேந்தர் பதவியின் முக்கியத்துவம் குறித்தும் ஏற்கனவே பல்வேறு அறிக்கைகளைக் கொடுத்திருக்கின்றன. துணை வேந்தர் நியமனங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதி முறைகள் குறித்து பல்கலைக்கழக மானியக்குழு விரிவான அறிவுரைகளை வழங்கியிருக்கிறது.  “புகழ் பெற்ற, சிறந்த கல்வியாளர்கள்”, “நிர்வாகத் திறமை மற்றும் கல்வி தரத்தினை மேம்படுத்தும் தலைமைப் பண்பு உள்ளவர்கள்”, “ஆசிரியர்களையும்- மாணவர்களையும் இணைக்கும் பாலமாகத் திகழ்பவர்கள்” துணை வேந்தர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு நடைபெறும் துணை வேந்தர் நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற புகார் வரலாறு காணாத அளவில் சமீப காலங்களில் கல்வியாளர்களால் எழுப்பப்படுகிறது. துணை வேந்தர் நியமனங்களில் சிறந்த நடைமுறைகளை கடைப்பிடிக்காத காரணத்தால், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த முடியாத ஒரு தேக்க நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

எடுத்துக்காட்டாக, தமிழகத்திலிருந்து “GATE” தேர்வு எழுதிய 80 ஆயிரத்து 903 மாணவர்களில் 4 ஆயிரத்து 869 மாணவர்கள் மட்டுமே 2015 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இந்த தேர்வு மூலம் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 6 சதவீதம் மட்டுமே! அடுத்தபடியாக, IIT- JEE advanced தேர்வு எழுதிய 2857 மாணவர்களில் வெறும் 602 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். “பணியில் அமர்த்தும் தகுதி” (Employability) படைத்த பொறியாளர்களின் சதவீதத்திலும் தமிழகம் முன்னனி மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற முடியவில்லை. போட்டி தேர்வுகளை சந்திப்பதற்கு ஏற்ற கல்வி தரத்தை மாணவர்களுக்கு வழங்குவதிலும் தமிழகம் மோசமாக பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது என்பது கவலைக்குறியதாக இருக்கிறது.
இளைய தலைமுறையினர்தான் இந்த நாட்டின் எதிர்காலம். அவர்களுக்குரிய தரமான கல்வியை அளித்து, நாட்டிற்கு அந்த உன்னத எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதில் பல்கலைக்கழகங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமிருக்க முடியாது. ஆகவே, சிறந்த, புகழ் பெற்ற கல்வியாளர்களை பல்கலைக்கழக துணை வேந்தர்களாக ஆட்சியாளர்கள் நியமித்தால்தான் கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியும். முதல் கட்டமாக சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனத்தில் தமிழக அரசு ஒரு வெளிப்படையான நடைமுறையை அறிவிக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை முறையாக கடைப்பிடித்து, சிறந்த கல்வியாளர்களை இந்த பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் ஒரு துணை வேந்தர் பல்கலைக்கழகத்தின் தலமை நிர்வாக அதிகாரி மட்டுமல்ல- மாநிலத்தின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டிய முதன்மை அதிகாரியும் ஆவார். திறமையானவர்களை புகழ் பெற்ற இந்த பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களாக அமர்த்தினால் தமிழக இளைஞர்கள் அகில இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் கூட எத்தகையை போட்டித் தேர்வுகளையும் எளிதில் சமாளித்து வெற்றி பெறுவார்கள். வேலை வாய்ப்பையும் பெறுவார்கள். நம் மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை தேடித் தருவார்கள். ஆகவே சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் நியமனங்களில் தனிக் கவனம் செலுத்தி, தமிழகத்தின் கல்வித்தரத்தை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.