Advertisement

பெண்ணாக பிறந்த நான் ஆணாக மாறியது ஏன்? - ஒரு குஜராத் மருத்துவரின் போராட்டம்

பெண்ணாக பிறந்த நான் ஆணாக மாறியது ஏன்? - ஒரு குஜராத் மருத்துவரின் போராட்டம்



பெண்ணாக இருந்து ஆணாக மாறியுள்ள அரசு மருத்துவரான பாவேஷ் பாய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சமூகத்தில் எதிர்கொள்ளும் போராட்டங்கள் பற்றி கூறிய சொற்கள் இவை.


பெண்ணாக பிறந்த நான் ஆணாக மாறியது ஏன்? - ஒரு குஜராத் மருத்துவரின் போராட்டம்

`நான் சிறுவனா சிறுமியா என்று இளம்வயதில் தெரியாது'

கேடா மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் பாவேஷ் பாய்.

17 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் நான்காவது குழந்தை இவர். 


குழந்தையாக இருந்த காலத்தில் உடல் அளவில் பெண்ணாக இருக்கிறோம், மனதளவில் ஆணைப் போல இருக்கிறோம் என்பது அப்போது அவருக்குத் தெரியவில்லை.


``சிறிய கிராமத்தில் பள்ளிக்கூடத்தில் நான் படித்தபோது, பத்தாம் வகுப்புக்கு வரும் வரையில் நான் ஆணா, பெண்ணா என்று எனக்குத் தெரியாது'' என்று பாவேஷ் பாய் தெரிவித்தார்.


"சிறு வயதில் பாலினம் பற்றிய எண்ணம் எதுவும் இல்லை. ஆனால் காலப்போக்கில் அது மாறத் தொடங்கியது'' என்றார் அவர்.


``மாணவிகளை எனக்குப் பிடிக்கும். ஆனால் அவர்களுடன் வெளியில் போவதோ அல்லது பேஷன் பற்றி அவர்களுடன் பேசியதோ கிடையாது'' என்று அவர் தெரிவித்தார்.


``பெண்ணைப் போல எனது நடவடிக்கைகள் இல்லை என்பதால், பலரும் என்னை வருத்தமடையச் செய்தனர். என்ன நடக்கிறது என்று அப்போது எனக்குப் புரியவில்லை. மற்றவர்கள் என்னிடம் இருந்து விலகிச் சென்றார்கள். எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு நான் தீவிரமாகப் படித்து, முதலாவது ரேங்க் பெற்றேன். என் குடும்பத்தினர் விரும்பியதைப் போல மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்தது'' என்று கடந்த காலம் பற்றி அவர் நினைவுகூர்கிறார்.


சான்றிதழ்களை மாற்றுவதற்கான போராட்டம்


"அப்போதிருந்து எனது உண்மையான போராட்டம் தொடங்கியது. என்னுடைய அனைத்து சான்றிதழ்களிலும் நான் பெண் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அரசுக் கல்லூரி விதிமுறைகளின்படி நான் மாணவியர் விடுதியில் தங்க வேண்டும். நான் மருத்துவம் படித்துக் கொண்டிருந்ததால், எனக்குள் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை அறிந்திருந்தேன்'' என்று அவர் தெரிவித்தார்.


"விடுதியில் நான் தனிமையாக உணர்ந்தேன். ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தொடங்கினேன்; மெல்ல மெல்ல என் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டன. விடுதியில் தங்கியிருப்பது கடினமாகிவிட்டது. மெல்ல மெல்ல, எனக்கு தாடி, மீசை முளைக்கத் தொடங்கியது'' என்று அவர் கூறினார்.

"மாணவர்களுக்கான விடுதியில் தங்க வைக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். என்னுடன் படித்த மாணவிகளுக்கு நான் `தீண்டத்தகாதவளாக' மாறிவிட்டேன். மாணவர்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை'' என்று அவர் குறிப்பிட்டார்.


``கல்லூரியில் என்னுடன் படித்த ஒரு மாணவி என்னை நன்றாகப் புரிந்து கொண்டாள். பெண்ணுக்கான உடைகளை நீ அணிந்து கொண்டாலும் அது பிரச்னை கிடையாது என்று என்னிடம் சொல்வாள். அவள் எனக்கு ஆதரவு கொடுத்தாள்'' என்றும் பாவேஷ் பாய் தெரிவித்தார்.


திருமணம் மற்றும் முதுமை பற்றிய அச்சம்

"உளவியல் நிபுணரை சந்திக்க என் தந்தையுடன் ஒரு நாள் நான் சென்றிருந்தேன்.


"திருமணம் செய்து கொள்வது பற்றிய நிறைய குழப்பம் இருந்தது. நான் ஆணாக மாறிவிட்டால், என்னைத் திருமணம் செய்து கொள்ள யார் ஒப்புக்கொள்வார்கள்? முதுமைக் காலத்தில் எனக்கு ஆதரவாக யார் இருப்பார்கள் என்று என் தந்தை கவலைப்பட்டார்'' என்றும் அவர் தெரிவித்தார்.


"எனக்குத் துணைவராக வரப் போகிறவர், எனக்கு முன்னதாக மரணம் அடைய மாட்டார் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா என்று நான் கேட்டேன். முதுமைக் காலத்தில் என் பிள்ளைகள் என்னை கவனித்துக் கொள்வார்கள் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா என்று கேட்டேன். அது நியாயமான வாதம் என என் தந்தை கருதினார்'' என்றும் அவர் கூறினார்.


"மகனே உனது பெருமையை வளர்த்துக் கொள். அது மட்டும் எனக்குப் போதும் என்று என் தந்தை கூறினார். நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, ஆணாக மாறிவிட்டேன்'' என்றார் அவர்.


அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய அனுபவம் பற்றிக் குறிப்பிட்ட அவர், ``அறுவை சிகிச்சை முடிந்து என் முகத்தை செவிலியர் காட்டியபோது, எந்த உணர்வும் என் முகத்தில் காணப்படவில்லை'' என்று கூறினார்.


``அறுவை சிகிச்சைக்குப் பிறகு எல்லோரும் குதூகலம் அடைவார்கள், நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே, ஏன் என்று செவிலியர் கேட்டார். `என் ஆன்மாவுக்கு உரிய சரியான உடல் கிடைத்துவிட்டது' என்று நான் கூறினேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் நிம்மதி கிடைத்ததாக உணர்ந்தேன்.''


``நான் விரும்பியதை அடைந்துவிட்டேன். என் ஆன்மாவுக்கு உரிய உடல் வந்துவிட்டது. மக்கள் என்னை நேசிப்பதற்காக நான் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை. என்னை நான் நேசித்ததால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்'' என்று பாவேஷ் பாய் கூறினார்.


நீதி கேட்டு உயர்நீதிமன்றத்தை நாடியது


அறுவை சிகிச்சை செய்த பிறகு தான் பாவேஷ் பாய் இரண்டாவது போராட்டம் தொடங்கியது. மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல அவர் விரும்பினார். அதற்கு, தனது பிறப்புச் சான்றிதழ், பள்ளிக்கூட, கல்லூரி சான்றிதழ்கள், கடவுச்சீட்டு ஆகியவற்றை மாற்றியாக வேண்டும். அவற்றில் பாலினம் பெண் என்பதை ஆண் என மாற்றியாக வேண்டும்.


அரசு விதியின்படி அவ்வாறு மாற்றம் செய்ய எந்தத் துறையும் தயாராக இல்லை. ஆண் என்பதற்கான சான்றிதழைப் பெற முயற்சி செய்தார். ஆனால் மூன்றாம் பாலினத்தவர் என்றுதான் சான்றிதழ் கிடைத்தது.


கடைசியாக குஜராத் உயர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார் அவர்.

``அரசியல் சட்டத்தின் 14, 15, 226, மற்றும் 227வது பிரிவுகளின் கீழ் உயர் நீதிமன்றத்தில் நாங்கள் மனு செய்தோம்'' என்று பாவேஷ் பாயின் வழக்கறிஞர் அமித் சௌத்ரி தெரிவித்தார்.


குழந்தைப் பருவத்தில் இருந்தே பாலினம் குறித்த உணர்வில் பாவேஷ் பாய் மாறுபட்டிருந்துள்ளார்.


அரசு மருத்துவமனை அளித்த சான்றிதழ் இந்த வழக்கின் உத்தரவில் முக்கியமான விஷயமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.


பாவேஷ் பாய் பிறந்ததில் இருந்து, கிரிமினல் பின்னணி எதுவும் அவருக்கு இல்லை.மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல விரும்புவதால் அவரது கடவுச்சீட்டு , பள்ளிக்கூடம், கல்லூரி சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றில் பாலினத்தை பெண் என்பதில் இருந்து ஆண் என மாற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.


அதன் அடிப்படையில் தான் நீதிபதி அல் தேசாய் உத்தரவு பிறப்பித்தார்.

``பாவேஷ் பாலின மாறுபாட்டு உணர்வு கொண்டவர் என்பதை அறிந்ததும், அவரை மாணவர் விடுதியில் தங்க நாங்கள் அனுமதித்தோம். இப்போது, உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தேவையான மாற்றங்களை செய்து தருவோம்'' என்று பவநகர் பல்கலைக்கழக துணை வேந்தர் மஹிபட் சிங் சாவ்டா தெரிவித்தார்.


நீண்ட போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ள பாவேஷ் பாய்,``தற்கொலை செய்து கொள்ள ஒரு கட்டத்தில் நான் யோசித்தது உண்டு. ஆனால், வாழ்வை முடித்துக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்தேன்'' என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.


``நீதிமன்றத்தை நாடுவதற்கு முன்னதாகவே எனக்கு வெளிநாட்டில் படிக்க கல்வி உதவித் தொகை கிடைத்துவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நான் வெளிநாடு செல்ல முடியும். ஆனால் இப்போது நான் அரசு மருத்துவமனையில் பணியாற்றி, நோயாளிகளைக் காப்பாற்றும் சேவையில் இருக்கிறேன். 


கொரோனா முடிந்த பிறகு, மேற்படிப்புக்காக நான் வெளிநாடு செல்வேன்'' என்று பாவேஷ் பாய் கூறினார்.


``சமூகத்தின் கூண்டில் இருந்து விடுதலை பெற்றது போல இப்போது உணர்கிறேன்'' என்று வானில் சிறகடிக்கும் பறவையைப் போன்ற மனநிலையில் இருக்கும் பாவேஷ் பாய் தெரிவித்தார்.

பெண்ணாக பிறந்த நான் ஆணாக மாறியது ஏன்? - ஒரு குஜராத் மருத்துவரின் போராட்டம்