உங்க வீட்டில் எவ்வளவுதான் பாலில் உறை ஊற்றி வைத்தாலும் தயிர் கெட்டியாக வரவில்லையா? நீங்கள் செய்யும் தவறு இதுதான்!
ஒரு சிலருடைய வீட்டில் தான் தயிர் என்பது எப்போதாவது சேர்த்துக் கொள்வது வழக்கமாக இருக்கும். ஆனால் பெரும்பாலான வீடுகளில் தயிர் தினமும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு வகைகளில் கட்டாயம் இடம் பெற்றுவிடும் ஒரு உணவு பொருளாகவே இருக்கும். தினமும் உணவு சாப்பிடும் பொழுது இறுதியாக தயிர் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
உடல் உஷ்ணத்தை தணிக்கும் தயிர் தயிராக எடுத்துக் கொள்வதை விட மோராக எடுத்துக் கொள்வது மேலும் சிறப்பான பலன்களை நமக்கு கொடுக்க கூடியது ஆகும். அடிக்கடி பால், தயிர் சேர்த்துக் கொள்பவர்களுக்கு எலும்பு தேய்மானம் பிரச்சனைகள் விரைவாக ஏற்படுவதில்லை. இவற்றை தவிர்க்கும் நபர்களுக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு எலும்பு தேய்மான பிரச்சனைகள் இளம் வயதிலேயே வந்து விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
இத்தகைய பலன்களை அதிகம் அள்ளிக் கொடுக்கும் தயிரை நம் வீடுகளில் உறை ஊற்றி வைப்பது வழக்கம். அதாவது பாலில் சிறிதளவு தயிரை சேர்த்து உறை ஊற்றி வைத்தால் மறுநாள் பால் முழுவதும் தயிராக மாறியிருக்கும். இது வீட்டிலேயே செய்யக்கூடிய ஆரோக்கியம் மிகுந்த தயிர் ஆகும். இதனை காசு கொடுத்து கடையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எனினும் இந்த தயிரை தயாரிக்கும் பொழுது பெரும்பாலானோருக்கு இருக்கும் சிக்கல் ஒன்று தான்.
நாம் என்னதான் நம் வீட்டிலேயே பாலில் தயிரை உறை ஊற்றி வைத்தாலும் கடையில் வாங்குவது போல தயிர் கெட்டியாக வருவது இல்லை. கடையில் வாங்கிய தயிரே ஒரு சில சமயத்தில் கெட்டியாக இருப்பதுமில்லை. தயிர் ஜெல்லி போல மிகவும் கெட்டியாக, ருசியாக வருவதற்கு என்ன செய்யலாம் தெரியுமா? நீங்கள் பாலுடன் சேர்க்கும் தயிர் கெட்டியாக இருந்தால் தான் நீங்கள் உறை ஊற்றி வைக்கும் பொழுது பால் கெட்டியாக மாறும். ஆகவே கெட்டித் தயிரை ஒரு முறை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை வைத்தே நீங்கள் ஒவ்வொரு முறையும் கெட்டியான தயிரை சுலபமாக செய்து விட முடியும்.
ஒரு லிட்டர் ஃபுல் கிரீம் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி மீடியம் ஃபிளேமில் வைத்து கொதிக்க விடுங்கள். பால் எந்த காரணம் கொண்டும் ஏடு கட்டக்கூடாது என்பதை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பாலில் ஏடுகட்ட துவங்கினால் தயிர் நமக்கு திரி திரியாக மாறிவிடும் ஆபத்து உண்டு. எனவே சிம்மில் வைத்து விட்டு எங்கும் செல்லாமல் மீடியம் ஃபிளேமில் வைத்து ஒரு கரண்டியை வைத்து கிண்டிக் கொண்டே இருங்கள். சுமார் 10 நிமிடம் அளவிற்கு நீங்கள் இதுபோல் பாலை ஏடு கட்ட விடாமல் கிண்டிக் கொண்டே இருந்தால் போதும். பால் கெட்டியாக மாறிவிடும். இந்தப் பாலை கை பொறுக்கும் சூடு இருக்கும் வரை ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் கைகளால் தொட்டுப் பார்த்தால் லேசான சூடு இருந்தால் போதும். பாலை வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பால் கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் இந்த சமயத்தில் தான் நீங்கள் ஒரு ஸ்பூன் அளவிற்கு கெட்டித் தயிரை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவில் இது போல் உறை ஊற்றி வைத்து விட்டால் போதும். மறுநாள் காலையில் உங்களுக்கு கெட்டியான தயிர், ருசி மிகுந்த ஆரோக்கியமான தயிர் சுலபமாகக் கிடைத்துவிடும்.