Advertisement

பழங்காலத்து மறந்து போன ஆச்சரியமூட்டும் சில எளிய வீட்டு வைத்தியங்கள்! இவற்றிற்கு ஈடு இணை எதுவுமே இல்லை.

பழங்காலத்து மறந்து போன ஆச்சரியமூட்டும் சில எளிய வீட்டு வைத்தியங்கள்! இவற்றிற்கு ஈடு இணை எதுவுமே இல்லை.

என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அதைவிட வேகமாக நம்முடைய ஆரோக்கியமும் கேள்விக்குறியாகி வருவதை நம்மால் மறுத்து விடவும் முடியாது. ஓடியாடி உழைத்த பணமெல்லாம் கடைசியில் மருத்துவத்திற்கு தான் நாம் செலவு செய்கிறோம். இதை உணர்ந்தால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருப்போமோ? என்னவோ? தெரியவில்லை. நம்முடைய முன்னோர்கள் எல்லாம் எந்த விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலத்தில் கூட ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்து வந்ததை நினைத்தால் இப்பொழுதும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

mooligai

அவர்கள் விட்டு சென்ற ஆச்சரியமூட்டும் சில வீட்டு வைத்தியங்களை, இன்றும் நாம் பயன்படுத்தினால் நீண்ட ஆயுளைப் பெற முடியும். நம் வீட்டு சமையல் அறையில் இல்லாத மருந்துகளை விடவா? மருந்தகத்தில் கொடுக்கும் மருந்துகள் வேலை செய்து விடும்? இரண்டு தலைமுறைக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் செய்து வந்த இந்த வீட்டுக் மருத்துவ குறிப்புகளை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவோம்.

நம் உடலானது அதிகம் தண்ணீரால் நிரம்பியது. நாம் தண்ணீரை எப்பொழுது குறைவாக குடிக்கிறோமோ! அப்பொழுது ஆரோக்கிய பிரச்சனையும் தலைதூக்க ஆரம்பித்து விடும். இதற்கு முதல் அறிகுறியாக வாய்ப்புண் ஏற்படுகிறது. வாய்ப்புண்ணிற்கு கொப்பரையாக இருக்கும் தேங்காயுடன் கசகசாவை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் ஒரே நாளில் வாய்ப்புண் காணாமல் போய்விடும். சிறு துண்டு கடுக்காயை எடுத்து வாயின் ஓரத்தில் வைத்துக் கொண்டு இருந்தால் வாய்ப்புண் விரைவாக ஆறும்.

koparai thengai

அடுத்தும் இதே பிரச்சனை தான். தண்ணீர் குடிக்காதவர்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. நீர்க்கடுப்பு என்பது சாதாரண பிரச்சனை அல்ல. இதனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். நீர்க்கடுப்பு இருப்பவர்களுக்கு புழுங்கல் அரிசியை வடித்த தண்ணீருடன், சிறிதளவு உப்பும், ஒரு டீஸ்பூன் வெண்ணெயையும் கலந்து குடித்து வர கொஞ்ச நேரத்திலேயே நல்ல நிவாரணம் கிடைத்துவிடும்.

கடினமான உணவுப் பொருட்களையும், குளிர்ச்சியான உணவுப் பொருட்களையும் அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு இளமையிலேயே பற்கூச்சம் ஏற்பட்டு விடுகிறது. இந்த பற் கூச்சத்தை விரைவாக சரி செய்வதற்கு, புதினா இலைகளை காய வைத்து பொடி செய்து கொண்டு அதனுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். புதினாவின் விதைகளை அடிக்கடி வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தால் பற் கூச்சம் ஏற்படுவது படிப்படியாக குறைந்து விடும்.

mint

வயது முதிர்வு காரணமாக வரும் இடுப்பு வலி, மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி உடனடியாக நீங்குவதற்கு சாதம் வடித்த கஞ்சியை சிறிதளவு எடுத்துக் கொண்டு அதில் அரை டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய்யும் கலந்து ஆற வைத்து குடித்து வந்தால் விரைவாக நிவாரணம் கிடைக்கும்.

backbonepain

வயிற்றுப் பொருமல் நீங்க பெயர் சொல்லாத மருந்தாக இருக்கும் வசம்பை எடுத்து நெருப்பில் சுட்டு கரியாக்கி, அந்த கரியுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை கலந்து வயிற்றின் அடிப்பகுதியில் தடவி விட்டால் போதும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

vasambu 3

இரவு தூங்கும் முன் பாலுடன் சிறிதளவு கசகசா தூள் சேர்த்து குடித்து வர உடல் வலி நீங்கி நிம்மதியான உறக்கமும் வரும். தொடர்ந்து இதை செய்து பாருங்கள் அற்புதமான மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். அதிக வியர்வை வெளியேறினால் ஒருவிதமான துர்நாற்றம் வீசும். நீங்கள் குளிக்கும் நீரில் சிறிதளவு படிகாரத்தை சேர்த்து குளித்தால் வியர்வை நாற்றம் நீங்கி, புத்துணர்வுடன் இருப்பீர்கள்.

padikaram

உடம்பில் புண்கள் இருந்தால் அவைகள் விரைவாக ஆற விரலி மஞ்சளை நெருப்பில் சுட்டு பொடி செய்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காலை மற்றும் இரவு வேளையில் தடவி வந்தால் விரைவாக குணமாகிவிடும். அது போல் கண்களில் தீராத பிரச்சனை இருப்பவர்கள், பசும்பாலுடன் சம அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதில் வெள்ளை தாமரை மலர்களைப் போட்டு கொதிக்கவிட்டு ஆவி பிடித்தால் கண்களில் இருக்கும் கண் நோய்கள் நீங்கும்.

virali-manjal

மழைக்காலங்களில் மற்றும் வைரஸ் தொற்று இருக்கும் இந்த காலகட்டத்தில் சுடு தண்ணீரை மட்டுமே பருக வேண்டும். சுடு தண்ணீருடன் கொஞ்சம் சுக்கை தட்டி போடுங்கள். ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. மேலும் உடம்பில் இருக்கும் வாயுவையும் வெளியேற்றிவிடும். தண்ணீர் குடிக்கும் எண்ணமும் தானாகவே வரும். தினமும் இரு வாழைப்பழங்களை சாப்பிட்டு வாருங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

sukku

கபம் நீங்க வீட்டில் எப்பொழுதும் வால்மிளகின் தூளை ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். தேவையான பொழுது தேனுடன் ஒரு சிட்டிகை சேர்த்து சாப்பிட்டால் கபம் நீங்கும். முந்தைய நாள் ஊற வைத்த வெந்தயத்தை மறுநாள் காலையில் அரைத்து, தயிருடன் சேர்த்து மூன்று வேளையும் குடித்து வந்தால் சீதபேதிக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கும். மேலும் நினைவாற்றல் பெருக வல்லாரை பொடியை தினமும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளலாம்.