Advertisement

இப்படி ஒரு மோர் குழம்பா? வெறும் 4 பொருள் போதுங்க! காரசாரமா சூப்பரா இருக்கும். ஒரு வாட்டி செஞ்சுதான் பாருங்களேன்!

இப்படி ஒரு மோர் குழம்பா? வெறும் 4 பொருள் போதுங்க! காரசாரமா சூப்பரா இருக்கும். ஒரு வாட்டி செஞ்சுதான் பாருங்களேன்!

சொன்னா நம்ப மாட்டீங்க! இந்த ஸ்டைல மோர் குழம்பு பொதுவா யார் வெச்சும், யாருமே பார்த்திருக்க மாட்டீங்க. அந்த அளவுக்கு சுவையான மோர் குழம்பு. குறைந்த பொருட்களை வைத்து தான் நாம் செய்யப் போகின்றோம். சில சமயம் மோர்குழம்பு நீர்த்துப் போய்விடும். சில சமயம் மோர்குழம்பு கட்டியாகி விடும். சில சமயம் திரிதிரியாகிவிடும். இப்படிப் பட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் இந்த மோர் குழம்பில் வாய்ப்பேயில்லை. பயப்படாம அரை மணி நேரத்தில் வச்சுட்டு போயிட்டே இருக்கலாம்! இந்த மோர் குழம்பு எப்படி செய்யலாம்? பார்க்கலாம் வாங்க!

mor-kuzhambu0

மோர் குழம்பு வைக்க தேவையான பொருட்கள்:

புளித்த தயிர் – 1/2 லிட்டர்

துவரம் பருப்பு – 2 டேபில் ஸ்பூன்

அரிசி-1/2 டேபில் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 15 (உங்கள் காரத்திற்கு ஏற்ப)

மோர் குழம்பு கூட்டு மாவு அரைக்க தேவையான பொருட்கள் இந்த 3 தான். துவரம்பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாய். குழம்பு வைக்கும்போது ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். தாளிப்பதற்கு கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் பெருங்காயம், வாசனைக்கு கொத்தமல்லி தழை. இந்த மோர் குழம்பில் காய் சேர்க்க போகின்றோம். சுரக்காய், சௌசௌ, முள்ளங்கி அல்லது கத்திரிக்காய் இதில் எதை வேண்டுமென்றாலும் இந்த மோர் குழம்பில் சேர்த்து கொள்ளலாம்.

mor-kuzhambu1

செய்முறை:

Step 1

முதலில் ஒரு சிறிய கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் துவரம் பருப்பு, பச்சரிசி, காய்ந்த மிளகாய் இவை மூன்றையும் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை சிறிது நேரம் ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு மொழுமொழுவென்று அரைத்துக்கொள்ளுங்கள்.

Step 2

இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 1 ஸ்பூன் கடுகு போட்டு, வரமிளகாய் 2 போட்டு, கருவேப்பிலை போட்டு, ஒரு சிட்டிகை பெருங்காயம் போட்டு, அதன்பின்பு சுரக்காய் போட்டு, இரண்டு நிமிடம் வதக்கி விட்டு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் கூட்டு மாவை, இதில் சேர்த்து கொள்ளவும். மிக்ஸியை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கழுவி குக்கரில் ஊற்றி விடுங்கள். குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு, ஒரு கொதி வந்ததும், சிம்மில் வைத்து விட்டு ஒரு விசில் வச்சுக்கோங்க. காயும், கூட்டு மாவும், பச்சை வாடை போவதற்கும் அந்த ஒரு விசில். கூட்டு மாவை நாம் வறுத்து தான் இருக்கின்றோம். (கத்திரிக்காய் போட்டீங்கன்னா, விசல் வைக்கக்கூடாது. கூட்டு மாவு குழம்பை 15 நிமிடம் நன்றாகக் கொதிக்க விட்டு விடுங்கள்.)

mor-kuzhambu2

Step 3

குக்கரில் ஒரு விசில் வருவதற்குள், 1/2 லிட்டர் தயிரை எடுத்து வைத்து, மோர்க் அடைகின்ற மத்தில் நன்றாக கடைந்து கொள்ள வேண்டும். மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது. மோர் பதத்திற்கும் சென்றுவிடக்கூடாது. சரியான பக்குவத்தில் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். கட்டாயம் தயிர் கட்டி கட்டியாக இருக்கக் கூடாது. (தயிர் புளிக்காமல் பால் வாசனையோடு இருந்தால் மோர் குழம்பு சுவையாக இருக்காது.) ரொம்பவும் தயிர் புளிப்பு சுவையிலும் இருக்கக் கூடாது. சரியான பக்குவத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விசில் வந்து பிரஷர் அடங்கியதும், குக்கரைத் திறந்து தயாராக வைத்திருக்கும் தயிரை அதில் ஊற்றி, அடுப்பில் மிதமான தீயில் வைத்து ஒரே கொதி வைத்தால் போதும். சுவையான மோர் குழம்பு தயார். கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடுங்கள். முக்கியமான விஷயம். மோர் குழம்பை சூடாக மூடி விடக்கூடாது. அடுப்பிலிருந்து இறக்கியதும் நன்றாக ஆற வைக்க வேண்டும்.

dry-chilli-milagai

பின்குறிப்பு: இந்த மோர் குழம்பு செய்வதற்கு மிளகாய் தூள் எல்லாம் சேர்க்கக்கூடாது. மிளகாயை கூட்டு மாவில் சரியான அளவு வைத்து அரைக்க வேண்டியது உங்கள் கையில்தான் உள்ளது. சிலர் வீட்டில் ஊசி மிளகாய் மிகவும் காரமாக இருக்கும். சிலர் வீட்டில் குண்டு மிளகாய் இருக்கும். அதற்கேற்றவாறு பக்குவத்தோடு காரம் வைத்துக் கொள்ளுங்கள்.

இதேபோல், துவரம்பருப்பை அதிகமாக வைத்து விட்டீர்கள் என்றால் மோர் குழம்பு கொஞ்சம் கட்டியாக இருக்கும். அரிசியை அதிகமாக வைத்து விட்டீர்கள் என்றால், மோர் குழம்பு கொழகொழப்பாக ஆகும். இவை இரண்டையும் மேல் சொல்லியிருக்கும் அளவில் சரியான அளவில் வைக்க வேண்டும்.

mor-kuzhambu3

இந்த மோர் குழம்பை இதே முறையில் தயாரித்து, வெறும் உளுந்து மாவை அரைத்து, வடை சுட்டு, வெங்காயம் போடாத மெது வடையை இந்த மோர்க் குழம்பில் போட்டு ஊற வைத்து சாப்பிடும் பட்சத்தில் அதன் சுவையே தனியாக இருக்கும்.

அதாவது, மோர் குழம்பு வைத்தவுடன் சூடாக இருக்கும்போது, வடையும் சூடாக சுட்டு எடுத்து இதில் போடவேண்டும். அந்த மோர் குழம்பு எல்லாம், அந்த வடை உறிஞ்சிக்கொள்ளும். பொதுவாக வெள்ளை நிறத்தில் தானே மோர் குழம்பு வடை வைப்பார்கள். ஆனால், இப்படி ஒரு முறை வைத்து பாருங்கள். இந்த முறையில் சில வீடுகளில் மட்டும் தான் மோர் குழம்பு வைக்கப்படும். நிறைய பேருக்கு இந்தக் குறிப்பு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே, ஒரு முறை முயற்சி செய்து தான் பாருங்களேன்! சுவையான வித்தியாசமான காரசாரமான மோர் குழம்பு கட்டாயம் எல்லோருக்கும் பிடிக்கும்.