எல்லா குழம்பு வகைகளையும் மணக்கச் செய்யும், வெங்காய வடகம், வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது?
நம் வீட்டில் வைக்கும் குழம்பு, கூட்டு, சாம்பார், கீரை கடையல் இவைகளை கமகமவென்று மணக்க செய்யும் இந்த வெங்காய வடகத்தை நம்முடைய வீட்டிலேயே சுலபமாக செய்து விட முடியும். நம்முடைய பாட்டிமார்கள், எந்த முறையில் இந்த வடகத்தை வீட்டில் செய்தார்கள் என்பதை பற்றி, இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதை தயார் செய்து வைத்து விட்டோமேயானால், ஒரு வருடத்திற்கு மேல் ஆனாலும், இந்த வடகம் கெட்டுப் போக வாய்ப்பே இல்லை. சில பேர் வீடுகளில் திருமணத்திற்கு முன்பாகவும், வீட்டில் நல்ல விசேஷங்கள் வைத்தால் அதற்கு முன்பாகவும் இந்த வடகத்தை வீட்டில் போட்டு வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்காய வடகம் செய்ய தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 2 1/2 கிலோ, பூண்டு – 1/4 கிலோ, உளுத்தம்பருப்பு – 100 கிராம், துவரம்பருப்பு – 100 கிராம், கடுகு – 2 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் தூள் – 50 கிராம், தனியா தூள் – 50 கிராம், பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன் கறிவேப்பிலை – 4 கொத்து, உப்பு – 100 கிராம், (நல்லெண்ணெய் – 50 ml தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், நெய் – 1 டேபிள்ஸ்பூன்).
முதலில் வெங்காயத்தை மட்டும் சிறியதாக(பொடிப் பொடியாக), நறுக்கிக் கொள்ள வேண்டும். கையில் நறுக்க முடியாதவர்கள், வெங்காயத்தை தோலுரித்து, நான்காக வெட்டி, மிக்ஸியில் போட்டு push பட்டன் வைத்துக்கூட சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்வார்கள். மிக்ஸியில் போட்டு மொழுமொழுவென்று அரைத்து விடக்கூடாது. ரிவர்ஸ் பட்டன் வச்சு ஒரு ஓட்டு ஓட்டிகோங்க.
அடுத்ததாக பூண்டு. பூண்டின் மேல் தோலை மட்டும் உரித்து தனித்தனி திரிகளாக எடுத்துக்கொண்டால், போதும். உள்ளே இருக்கும் தோலை உரிக்க வேண்டாம். அதை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு, ஓட்டி ஒன்றும் இரண்டுமாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது நல்ல பெரிய, குவாலிட்டியான பிளாஸ்டிக் டப்பாவை, எடுத்துக் கொள்ளுங்கள். பிளாஸ்டிக் பக்கெட் போன்று இருந்தாலும் பரவாயில்லை. சில்வரில் வைக்கும் பட்சத்தில், சில்வர் பாத்திரம் துரு பிடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இப்போது வடக கலவையை செய்ய தொடங்கலாம். பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து வைத்திருக்கும் பூண்டு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, தனி மிளகாய் தூள், தனியா தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு, எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக மேல் குறிப்பிட்டுள்ள அளவின்படி, சேர்த்து ஒரு கரண்டியை போட்டு, எல்லா பொருட்களையும் ஒன்றாக கலக்கி, வைத்துவிடவேண்டும். முடிந்தால் பக்கெட்டோடு எடுத்து, ஒரு குலுக்கு குலுக்கி வைத்து விடலாம். ஒரு வெள்ளைத் துணியை அந்த பக்கெட்டின் மேல், நூல் போட்டு கட்டி மூடி வைத்துவிட வேண்டும். தட்டு போட்டு மூடக்கூடாது.
இரண்டு நாட்கள் அப்படியே இருக்கட்டும். மூன்றாவது நாள் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் கலவையை, ஒரு தாம்பாளத் தட்டில் மேல், பெரிய பிளாஸ்டிக் கவராக விரித்து, அதன் மேல் இந்த கலவையை கொட்டி வெயிலில் காய வைக்க வேண்டும். வெங்காயத்தில் லேசாக தண்ணீர் விட்டிருக்கும். அதோடு சேர்த்து வெயிலில் காய வைத்து விடுங்கள். 5ல் இருந்து 9 நாட்கள் வரை, வெங்காயத்தில் இருக்கும் ஈரப்பதம் போகும் வரை காயவைக்கவேண்டும். வெங்காயத்தில், ஈரப்பதம் உள்ளதா என்பதை, பார்க்கும் போது உங்களுக்கே தெரியும். ஐந்து நாட்களுக்குப் பிறகு 6வது நாள், 7வது நாள், எந்த நாளில் வேண்டுமென்றாலும் பின்வருமாறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளலாம். (அதிக வெயிலில் ஒன்பது நாள் வரை காய வைத்தீர்கள் என்றால் மொறுமொறுவென்று ஆகிவிடும். உருண்டை பிடிக்க வராது.)
ஈரப்பதம் காய்ந்த வடக கலவையோடு, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய், இவை மூன்றையும் மேல் குறிப்பிட்ட அளவு ஊற்றி, உங்கள் கைகளால் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, ஒரு தாம்பூலத் தட்டில், சுத்தமான கவரை விரித்து, அதன் மேல் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் உருண்டைகளை வைத்து வெயிலில் காயவைக்க வேண்டும்.
நீங்கள் பிடித்து வைத்திருக்கும் உருண்டை, வெயிலில் காய்ந்து, சுருங்கி, சிறிய உருண்டையாக மாறும். அதை உடைத்து பார்க்கும் போது அதன் உள்பக்கத்தில் ஈரம் சிறிதளவு கூட இருக்கக்கூடாது. (உள்ளே ஈரப்பதம் இருந்தால், நீண்ட நாட்கள் எடுத்து வைக்கும் பட்சத்தில், வண்டு வந்து விடும். சில பேர் எண்ணெய் கலவையை கலந்து உதவிரியாகவே கூட, காய வைத்து எடுத்து வைத்துக் கொள்வார்கள்.) வெயிலில் காய வைப்பதற்கு, சரியான நாள் எண்ணிக்கை என்று பார்த்தால், 48 நாட்கள் காய வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் நல்ல வெயிலில் 30 நாட்கள் வரை காய வைத்து எடுக்கும் பட்சத்தில் வடகம் தயாராகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வடகத்தை மாதவிடாய் நாட்களில் பெண்கள் தொடக்கூடாது. அதாவது, வடகம் தயார் செய்யும்போது சுத்தபத்தமாக இருக்க வேண்டும். மொத்தமாக தயார்செய்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். தினம்தோறும் சமையலுக்கு, பயன்படுத்தக்கூடிய வடகத்தை, சிறிய டப்பாவில் கொஞ்சம் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம்.
வடகம் செய்யும்போது, வடக கலவையின் மீது, துடைப்பம் கால் இவைகளெல்லாம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். லக்ஷ்மி அம்சம் பொருந்தியது கூட இந்த வடகம். வத்த குழம்பு, காரக் குழம்பு, சாம்பார், கீரை இவைகளுக்கெல்லாம் சிறிதளவு போட்டு தாளிக்கும் பட்சத்தில், அதனுடைய சுவையும் வாசமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சிரமம் பார்க்காமல், வீட்டில் இந்த வடகத்தைப் போட்டு வையுங்கள் மிகவும் நல்லது.