Skip to main content

எதெல்லாம் முகத்தில் கட்டாயம் போடக்கூடாத விஷயங்கள் என்று நீங்களும் கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க!

எதெல்லாம் முகத்தில் கட்டாயம் போடக்கூடாத விஷயங்கள் என்று நீங்களும் கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க!

எல்லாருக்குமே முகம் அழகா இருக்கணும்னு ஆசை தான். அதுக்காக கிடைக்கிற எல்லாத்தையும் முகத்தில் போட்டு முகத்தை கெடுத்துக் கொள்ளக் கூடாது. நம் உடலின் மற்ற பாகங்கள் வேறு, முகம் என்பது வேறு. நாம் தினமும் முகத்துக்கு உபயோகிக்கும் சில பொருட்களில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் மூலக்கூறுகளும் இருக்கும். அந்த வகையில் எந்த பொருட்களை நாம் முகத்திற்கு கட்டாயம் பயன்படுத்தக் கூடாது? ஏன் பயன்படுத்தக் கூடாது? பயன்படுத்தினால் என்ன ஆகும்? என்பதைப் பற்றி இப்பதிவில் விரிவாக நாம் காணலாம்.

men-face

முகத்தில் இருக்கும் தோல் பகுதி மிகவும் மென்மையானது. இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். உடலுக்கு பயன்படுத்தும் பொருளை நாம் முகத்திற்கும் சேர்த்து பயன்படுத்தக்கூடாது. அது கடைகளில் விற்கும் செயற்கை பொருட்களாக இருந்தாலும் சரி, வீட்டில் உபயோகிக்கும் இயற்கை பொருட்களாக இருந்தாலும் சரி. எனவே எந்தெந்த பொருட்கள் நம் முகத்திற்கு உகந்தவை அல்ல என்பதை பார்ப்போம்.

முதலில் நாம் பார்க்க இருப்பது, நாம் அனைவருமே செய்யக்கூடிய தவறு ஒன்று இருக்கிறது. அது நாம் உபயோகிக்கும் குளியல் சோப். இது பலருக்கு தெரிந்து இருந்தாலும் அதை பெரிதாக பொருட்படுத்துவதே கிடையாது. குளியலுக்கு பயன்படுத்தும் எந்த வகையான சோப்பாக இருந்தாலும் சரி, நாம் முகத்தைத் தவிர மற்ற பாகங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் இருக்கும் ‘சோடியம் லாரில் சல்பேட்’ என்னும் வேதிப்பொருள் முகத்தில் இருக்கும் தோலை அதிகம் வறண்டு போகச் செய்து விடும். இந்த ஒரு தவறை நீங்கள் மாற்றிக் கொண்டாலே உங்களது முகம் மென்மை தன்மையுடன் பளிச்சென்று இருக்கும். சோப்பிற்கு பதிலாக உங்கள் முகத்திற்கு ஏற்ற ஜெல் அல்லது இயற்கை பொடிகளை பயன்படுத்தினால் நல்லது.

soap-bar

உடலுக்கு பயன்படுத்தும் பாடி மாய்ஸ்சுரைசர் முகத்திற்கு கட்டாயம் பயன்படுத்தக்கூடாது. கழிவுகள் முகத்தில் இருக்கும் துளைகள் வழியாக வெளியேறுகின்றன. நீங்கள் பாடி மாய்ஸ்சுரைசர் உபயோகித்தால் முகத்தில் இருக்கும் துளைகள் அடைபட்டு கழிவுகள் வெளியேறுவது தடுக்கப்படும். இதனால் முகப்பருக்கள் போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

அடுத்து நிறைய பேர் பல் தேய்க்க உபயோகிக்கும் ‘டூத் பேஸ்ட்களை’ முகத்தில் இருக்கும் பருக்கள் மீது பயன்படுத்துகின்றனர். சாதாரணமாக முகத்தின் P.H லெவல் 5.5 என்றால் டூத் பேஸ்ட்டில் இருக்கும் P.H லெவல் 8 ஆக இருக்கிறது. இதனால் முகத்தில் எரிச்சலும், வறண்டும் போய் நிறமும் மாறக்கூடிய வாய்ப்புகளும் உண்டு.

toothpaste-skin

முக அழகிற்கு பயன்படுத்தும் கலவைகளில் எலுமிச்சை நீங்கள் சேர்க்க வேண்டும் என்றால் எலுமிச்சையின் அளவு சரியாக இருக்க வேண்டும். எலுமிச்சையில் இருக்கும் ‘சிட்ரஸ்’ என்கிற மூலக்கூறு எரிச்சலையும், அரிப்பையும் உண்டாகும். எலுமிச்சை சாறை மட்டும் தனியாக முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. அவற்றுடன் வேறு சில பொருட்களை கலந்து தான் பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி உங்கள் முகத்திற்கு பயன்படுத்தும் எந்த வகை பொருட்களிலும் ‘ஆல்கஹால்’ சேர்க்கப்பட்டிருந்தால் அதனை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஆல்கஹால் கலக்கப்பட்ட முகப்பூச்சுகளை நீங்கள் உபயோகிக்கும் பொழுது ‘ஜில்லென்று’ நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இது முகத்தில் இருக்கும் தோலை பாதிப்படைய செய்யும்.

alcohol

சுடுதண்ணீர் பயன்படுத்தி நீங்கள் முகத்தை அடிக்கடி கழுவக்கூடாது. சுடுதண்ணீர் பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் நீங்கும் என்று நீங்கள் நினைக்கலாம். அது சரி தான். ஆனால் எப்போதாவது சுடுதண்ணீர் பயன்படுத்தினால் பரவாயில்லை. நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பொழுது முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மை நீங்கி முகம் வறண்டு விடும்.

garlic-skin

பூண்டை நீங்கள் பச்சையாக முகத்திற்கு பயன்படுத்தினால் அது அவ்வளவு நல்லதல்ல. பூண்டை பயன்படுத்தினால் முகப்பருக்கள் குறைவது போன்ற உணர்வு இருந்தாலும், பூண்டில் இருக்கும் ‘அல்லிசின்’ என்கிற ஒரு பொருள் முகத்திற்கு எரிச்சலை ஊட்டுவதாக இருக்கும். இதனால் முகத்தில் இருக்கும் தோல் பாதிக்கப்படும்.

Comments