இட்லி, தோசை, சப்பாத்தி, ஆப்பத்திற்கு இதைவிட, தொட்டுக்க சூப்பரான வேற குழம்பு இருக்கவே முடியாது! மணக்க மணக்க, காரசாரமா ‘நம்ம வீட்டு வடகறி’ எப்படி செய்வது?
இந்த வடகறி முழுக்க முழுக்க நம்ம வீட்டுல செய்யுற வடகறி தாங்க! ஹோட்டல் டேஸ்ட் கட்டாயம் இருக்காது. காரசாரமா சூப்பர் வடகறி எப்படி செய்யறது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பெரும்பாலும், இப்படி ஒரு வடகறி யாரும் செய்ய மாட்டாங்க! ஆனா, நீங்க ஒரே ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க சூப்பரா இருக்கும்.
இந்த வடகறி செய்வதற்கு முதலில் மெது பக்கோடாவை சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின், அந்த பக்கோடாவை வைத்து வடகறி தாளிக்க வேண்டும். முதலில் மெது பக்கோடா எப்படி செய்வது, என்பதை தெரிந்து கொண்டு, அதன் பின்பு, வடகறி எப்படி தாளிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். சுலபமாக தான் இருக்கும். எப்படி செய்வது என்று பார்த்து விடலாமா?
மெது பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு-1 கப், சோம்பு-1/2 ஸ்பூன், இஞ்சி-சிறிய துண்டு (தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.), பூண்டு-4 தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள், பெரிய வெங்காயம் (சிறிய அளவு)-பொடியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள், வரமிளகாய்-4, முழு தனியா-1/4 ஸ்பூன், கருவேப்பிலை-ஒரு கொத்து, தேவையான அளவு உப்பு, பக்கோடா பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய்
எப்போதுமே ஒரு கப் அளவு என்பது உங்கள் வீட்டில் அளக்க பயன்படுத்தும் ஆழாகிலோ அல்லது டம்ளரிலோ ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அளவு கடலைப்பருப்பு எடுத்துக்கொண்டு அதை மூன்று முறை கழுவி விட்டு நல்ல தண்ணீர் ஊற்றி நான்கில் இருந்து ஐந்து மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். கடலைப்பருப்பு ஊறுவதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊறவைத்த கடலைப்பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். அதில் சோம்பு, இஞ்சி, பூண்டு, வரமிளகாய், முழு தனியா, தேவையான அளவு உப்பு, கருவேப்பிலை, சேர்த்து பருப்பு வடைக்கு அரைப்பது போல கொறகொறவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவை தனியான பாத்திரத்தில் மாற்றி அதில் சிறிய வெங்காயத்தை பொடியாக வெட்டி போட்டு பிசைந்து, கொள்ள வேண்டும்.
அதன் பின்பு எண்ணெய் சட்டியில் சிறிய சிறிய உருண்டைகளாக இந்த மாவை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது நமக்குத் தேவையான மெது பகோடா ரெடி. பருப்பு வடை போல இதை வெறுமனே ஸ்னாக்ஸ் போலும் சாப்பிட்டு கொள்ளலாம். இந்த பக்கோடாவை வைத்து தான் வடகறி செய்யப் போகின்றோம்.
வடகறி செய்ய தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய்-4 டேபிள் ஸ்பூன், சோம்பு-1ஸ்பூன், பட்டை-2, லவங்கம்-2, முந்திரி-4, ஏலக்காய்-1, பிரியாணி இலை-1, கறிவேப்பிலை-1 கொத்து, பச்சை மிளகாய்-4 நான்காக வெட்டி குறுக்காகவும் கீறி கொள்ளுங்கள், பெரிய வெங்காயம்-2 பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள், இஞ்சி பூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
மிளகாய்த் தூள்-தேவைக்கு ஏற்ப, தனியா தூள்-தேவைக்கு ஏற்ப, மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு.
ஒரு பெரிய குக்கரை அடுப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். அதில் நல்லெண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு கறிவேப்பிலை பச்சை மிளகாய் எல்லாவற்றையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும். அதன் பின்பு, பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின்பு இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாடை போக வதக்குங்கள்.
இஞ்சி பூண்டு பச்சை வாடை போனதும், அதில் குழம்பிற்கு தேவையான தண்ணீரை ஊற்றவேண்டும். அதன்பின்பு தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சேர்த்துக் கொள்ள வேண்டும். (இதில் நாம் சுட்டு வைத்திருக்கும் மெது பகோடாவை சேர்க்க போகின்றோம். ஆகவே, குழும்பிற்கு தேவையான உப்பை மட்டும் போட்டால் போதும்.) கவனத்தோடு உப்பை கொஞ்சமாக போட வேண்டும்.
இப்போது, குக்கரில் தாளித்து குழம்பு நன்றாக கொதி வர வேண்டும். (குக்கரில் தண்ணீர் ஊற்றும்போது உங்களிடம் இருக்கும் மெது பக்கோடா விற்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்ற வேண்டும். ஏனென்றால், மெது பக்கோடா அந்தத் தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை உடையது.) அதன் பின்பு, நீங்கள் பொரித்து வைத்திருக்கும் மெது பகோடாவை இந்த கொதிக்கின்ற குழம்பில் கொட்டி விடுங்கள். நன்றாக கொதி வந்த பிறகு, குக்கரின் மூடியை போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து, ஒரே விசில் வைத்தால் மட்டுமே போதும். அந்த வாசமே சொல்லும், உங்கள் குழம்பு எவ்வளவு சூப்பராக இருக்கிறது என்று.
அடுப்பிலிருந்து இறக்கி விசில் எடுத்து, குழம்பை பார்க்கும்போது, அந்த பகோடாக்கள் உருண்டை, உருண்டையாக குழம்பில், உப்பு கார தோடு சுவையாக இருக்கும். நீங்கள் ஊட்டியை எண்ணெய் மேலே மிதந்து இருக்கும். ஒரு குழி கரண்டியை வைத்து, அந்த பக்கோடா உருண்டைகளை, லேசாக கிளறி விட்டாலே போதும். இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி விட்டுவிடுங்கள். வடகறி பதத்திற்கு வந்துவிடும். மிகவும் கெட்டியாக இருந்தால் சூடான தண்ணீர் வைத்து அதில் கொஞ்சம் ஊற்றிக் கலந்து கொள்ளலாம். இந்த குழம்பிற்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருக்கும் பட்சத்தில் 10 இட்லி கூட சுலபமாக சாப்பிட்டு விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நிறைய பேருக்கு இதில் தக்காளி சேர்க்க வேண்டாமா? என்ற சந்தேகம் இருக்கும் தக்காளியை சேர்க்கக்கூடாது.