Advertisement

காய்கறியே இல்லாமல் ‘அருமையான குருமா கிரேவி’ காரசாரமாக எப்படி வைப்பது? டிபன், சாப்பாடு ரெண்டுக்கும் செம்ம காம்பினேஷன்!

காய்கறியே இல்லாமல் ‘அருமையான குருமா கிரேவி’ காரசாரமாக எப்படி வைப்பது? டிபன், சாப்பாடு ரெண்டுக்கும் செம்ம காம்பினேஷன்!

காய்கறி இல்லாமல் குருமா செய்வது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம் என்று அனைத்து வகையான டிபன் வகைகளுக்கும் ஏற்ற அருமையான காரசாரமான கிரேவியை திக்காக எப்படி செய்வது என்று இப்பதிவில் பார்ப்போம். இட்லி, தோசை, சப்பாத்தி என்று டிபன் வகைகளுக்கு மட்டுமல்லாமல் சாதத்திலும் பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். நாவில் இருக்கும் சுவை அரும்புகள் மத்தளம் இல்லாமல் நடனம் ஆடும்.

kurma-gravy

இதற்கு தேவையான பொருட்கள்:

சோம்பு – 1 டீஸ்பூன், வெங்காயம் – 2 (பெரியது), தக்காளி – 3, இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், காஷ்மீர் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன், மல்லி தூள் – 3 டீஸ்பூன், சாம்பார் தூள் – 2 டீஸ்பூன், கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன்.

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:

ஏலக்காய் – 2, கிராம்பு – 2, பட்டை – 2, சீரகம் – 1 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், கசகசா – 1 டீஸ்பூன், பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 6, துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன், முந்திரி – 5.

rice-with-gravy

செய்முறை:

வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் மெல்லியதாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்குவதில் தான் சூட்சமம் இருக்கிறது. எனவே எவ்வளவு முடியுமோ அவ்வளவு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் பொடிதாக நறுக்கிய 3 தக்காளிப்பழம், சிறிதளவு மஞ்சள் தூள், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். ஒரு ஐந்து நிமிடம் அப்படியே மூடி வைக்கவும். இடையிடையே கிளறிக் கொண்டே இருங்கள். அதற்குள் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் தக்காளி நன்கு மசிந்ததும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

kurma-gravy1

பிறகு காஷ்மீர் மிளகாய் தூள், மல்லி தூள், சாம்பார் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறிவிடவும். அதன் பின் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதித்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும். அவ்வளவு தான். காஷ்மீர் மிளகாய் தூள் இல்லையென்றால் காரத்திற்கு ஏற்ப தனி மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். அட்டகாசமான ப்ளெயின் கிரேவி தயார். சட்டென செய்து அப்பளம் அல்லது ஆம்ப்ளேட் பொரித்தால் போதும் லஞ்ச் முடிஞ்சிரும்.