Advertisement

கோதுமை தானிய உணவுகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இதோ

கோதுமை தானிய உணவுகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இதோ

உலகில் அதிக அளவு மக்களால் உணவாக சாப்பிட பயன்படுத்தப்படும் தானியமாக கோதுமை இருக்கிறது. மனிதர்களால் முதன் முதலில் கோதுமை தென்மேற்கு ஆசிய பகுதியில் பயிரிடப்பட்டது. ட்ரிடிகம் எனப்படும் புல் வகையைச் சார்ந்ததாக கோதுமை இருக்கிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முழுமை தானியங்களில் ஒன்றாக கோதுமை விளங்குகிறது. தினசரி மூன்று வேளைகளும் உணவாக உட்கொள்ளத் தக்க தானிய வகைகளில் கோதுமை பிரதான இடத்தை வகிக்கிறது. அப்படிப்பட்ட கோதுமை தானிய உணவுகளை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

wheat

கோதுமை பயன்கள்

செலினியம் சத்து 

கோதுமையில் செலினியம் என்கிற மூலப் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த செலினியம் மனிதர்களின் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. தவிடு நீக்கப்படாத கோதுமையை உணவாகக் சாப்பிடுபவர்களுக்கு செலினியத்தில் அதிகம் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சத்துக்கள் உடலில் உள்வாங்கப்பட்டுதோலை தளர்ந்து விடாமல் தடுத்து, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் செய்து இளமையான தோற்றத்தை தருகிறது.

முகப்பருக்கள் 

உடலை புத்துணர்ச்சி பெற செய்யும் உணவாக கோதுமை இருக்கிறது. அதுபோக கோதுமையில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இத்தகைய நார்ச்சத்து நிறைந்த கோதுமையை உணவாக செய்து சாப்பிடுவதால் இரத்தத்தில் இருக்கின்ற நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, உடலை தூய்மைப்படுத்துகிறது. தோலில் இருக்கின்ற நச்சுக்கள் வெளியேறி விடுவதால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படாமல் சருமத்தை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

wheat

தலைமுடி ஆரோக்கியம் 

மனிதர்கள் அனைவரின் தலைக்கு பாதுகாப்பையும், முக அழகையும் தருவதில் தலைமுடி முக்கிய பங்காற்றுகிறது. பெரும்பாலானவர்களுக்கு வயதாகும் காரணத்தினாலும், உடலில் சத்துக் குறைபாட்டினாலும் முடி கொட்டுதல், தலைமுடிஅடர்த்தி குறைவது போன்ற குறைபாடு ஏற்படுகிறது. கோதுமையில் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. இந்த ஜிங்க் சத்து தலைமுடிக்கு பலம் தந்து, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. மேலும் தலைமுடிக்கு பளப்பளப்பு தன்மையையும் தருகிறது.

ஊட்டச்சத்து உணவு 

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயலாற்ற உணவில் சரிவிகிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவது அவசியமாகும். அதிலும் குறிப்பாக வைட்டமின் பி சத்து தினந்தோறும் சாப்பிடும் உணவில் இடம் பெற வேண்டும். கோதுமையில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு, இந்த வைட்டமின் பி சத்து அதிகம் கிடைத்து நாள் முழுவதும் உடல் மற்றும் மனச் சோர்வு ஏற்படாமல் காக்கிறது. உடல் உறுப்புகளின் செயல்பாடு சீராக இருக்கவும் உதவுகிறது.

wheat

நீரிழிவு நோயாளிகள் 

நீரிழிவு நோயாளிகள் தினமும் சாப்பிட ஒரு ஊட்டச் சத்துமிகுந்த உணவாக கோதுமை இருக்கிறது. கோதுமையில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் எளிதில் செரிமானம் செய்யக் கூடிய உணவாக கோதுமை இருக்கிறது. மேலும் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை சரியான விகிதத்தில் வைத்திருந்து நீரிழிவு நோய் வராமலும் தடுக்கிறது.

மார்பக புற்று நோய் 

இக்காலங்களில் பெண்கள் பலரையும் அச்சுறுத்தும் ஒரு நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. மேலை நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கோதுமை தானியம் கொண்டு செய்யப்பட்ட உணவுகள் மற்றும் கோதுமை தவிட்டை கொண்டு செய்யப்பட்ட உணவுகளையும் சாப்பிட்டு வந்ததில், அதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் பெண்களுக்கு அதிகம் கிடைத்து, அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

wheat

ஞாபக மறதி, மனநலம் 

உடல்நலம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதற்கு நிகராக மனநலமும் சிறப்பாக காக்கப்படவேண்டும். அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்ட நபர்களுக்கு அதிலிருக்கும் வைட்டமின் பி மற்றும் ஈ சத்துக்கள் அவர்களின் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை வலுபடுத்தியதோடு, அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோய் மற்றும் இன்னபிற மனநல குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டாதாக தெரியவந்திருக்கிறது.

பக்கவாதம் 

உடலில் நரம்பு மண்டலங்கள் வலு குறைந்திருப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. இத்தகைய உடல்நிலையை பெற்றவர்கள் நார்ச்சத்து நிறைந்த கோதுமை தவிடு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினமும் சாப்பிடுவது நல்லது. கோதுமையில் இருக்கும் நார்ச்சத்து நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி இதயம் மற்றும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் காத்து, பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கிறது. பக்கவாதம் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகம் இருப்பவர்கள் கட்டிப் பசும் தயிரில், கோதுமை தவிடு கலந்து அதில் ஏதேனும் ஒரு பழத்தை சேர்த்து தினமும் காலையில் சாப்பிடுவது நல்லது.

wheat

குடல் புற்று 

மாமிச உணவுகள் அதிகமாகவும், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் குறைவாகவும் சாப்பிடும் பழக்கம் கொண்ட மேலை நாட்டினருக்கு கோலன் கேன்சர் எனப்படும் குடல் புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. கோதுமை உணவுகளை தினமும் சாப்பிடுபவர்களுக்கு வயிறு, குடல் போன்றவற்றில் சேர்ந்திருக்கும் ஆபத்தான நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, அதிலிருக்கும் அதிக நார்ச்சத்து ஆபத்தான குடல் தொற்று ஏற்படமால் காக்கிறது. தினமும் குறைந்த பட்சம் 20 முதல் 25 கிராம் வரை நார்ச்சத்து அதிகம் நிறைந்த கோதுமை உணவுகளை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வைட்டமின் சத்துகள் 

கோதுமை தானியம் அனைத்து வகையான வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்த ஒரு உணவாக இருக்கிறது. இதில் இருக்கும் தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின் போன்ற வைட்டமின் பி சத்துக்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் சத்தின் மற்றொரு வகையான போலிக் ஆசிட் அல்லது ஃபோலேட் எனப்படும் சத்து உடலில் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. கோதுமை தானிய உணவுகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சாப்பிடுவதால். அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பிறவியிலேயே ஏற்படும் நோய்கள், குறைபாடுகளை தடுக்கிறது.