மீன் சாப்பிடுவதால் இத்தனை பயன்களா?
ஆரோக்கியமான அசைவ உணவு என்றால் அதில் மீனிற்கு முதலிடம் உண்டு. மீனின் சுவைக்கு நம் நாக்கு அடிமைதான். சுவைக்காக மட்டுமல்லாமல், அந்த மீனை நாம் உணவாக உட்கொண்ட பின்பு குறைந்த நேரத்தில், எளிதில் ஜீரணமாகி, ரத்தத்தில் கலந்து உடலுக்கு தேவையான சத்துக்களை தந்துவிடுகிறது. நம் உடலிற்கு ஆரோக்கியம் தரும் இந்த மீனை சாப்பிட்டால் நல்லது என்பதை நம் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கின்றோம். ஆனால் அந்த மீனில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை குழந்தைகளுக்கு சொல்கிறோமோ? மீனினால் என்னென்ன நோய்கள் குணப் படுத்தபடுகிறது என்று அறிந்திருக்கின்றோமா? சிந்தித்துப் பார்த்தால், சிலருக்கு தெரியாது என்றுதான் கூறுவோம். அளவில்லா சுவையையும், அளவில்லா சத்துக்களையும் உள்ளடக்கிய இந்த மீனின் பயன்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் சற்று விரிவாக காண்போம்.
மீனில் உள்ள சத்துக்கள்
நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் இந்த சத்துக்கள் அடங்கியுள்ளது. கடலில் இருந்து நமக்கு கிடைக்கும் மீன்களில் முக்கியமான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த சத்தானது உடலில் மெட்டபாலிசத்தை சீராக வைக்க உதவுகிறது. நம் உடலை ஒல்லியாக வைத்துக் கொள்ள ஒமேகா 3 ஃபேட்டி உதவி செய்கிறது.
ஆஸ்துமா
குழந்தைகளுக்கு உணவில் மீன் அதிகமாக சேர்த்து வர ஆஸ்துமா நோயை வரவிடாமல் தடுக்கலாம். ஆஸ்துமாவில் பாதிக்கப்பட்டோர் மீனை உண்டு வந்தால் அதன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.
மூளைக்கும் கண்களுக்கும்
மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் உள்ளது. இதனால் நம் கண் பார்வை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம். கண்பார்வை பாதிக்கப்பட்டவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பாதிப்பு குறையும். நம் மூளையில் உள்ள செல்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த ஒமேகா 3 உதவி செய்கிறது.
எலும்பின் உறுதிக்கு
மீனில் வைட்டமின் டி சத்து நிறைந்துள்ளது. இதனால் டயட்டில் உள்ளவர்கள் இந்த உணவினை சேர்த்துக் கொள்ளலாம். நாம் உண்ணும் உணவில் உள்ள கால்ஷியத்தை உறிஞ்சி, நம் எலும்பு வளர்ச்சியை ஆரோக்கியமாக்க இந்த விட்டமின் டி அவசியமாக நம் உடலுக்குத் தேவைப்படுகிறது.
இதய நோய்
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மீனில் அதிகம் உள்ளதால் இதயத்தில் உள்ள ரத்தக் குழாய் அடைப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குறைக்கப்படுகின்றன. நம் இதயத்தை இந்த ஒமேகா-3 கொழுப்பு பாதுகாக்கிறது. மீனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம் இதயம் ஆரோக்கியமாக இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
மனச்சோர்வு
மனச்சோர்வு உடையவர்களால் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட முடியாது. மீனை தொடர்ந்து சாப்பிட்டு வர மீனில் உள்ள, மீன் எண்ணெய் சத்து மனச்சோர்வை அகற்றி நம் உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. இதனால் நாம் ஆரோக்கியமாக வாழலாம். சத்துக் குறைபாடு உள்ளவர்கள் மீன் சத்து மாத்திரையை நாம் கண்டிருப்போம்.
நிம்மதியான தூக்கம்
தினமும் இரவில் தூக்கம் வராமல் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. நல்ல ஆழ்ந்த தூக்கம் இருந்தால் தான் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை நம்மால் பெற முடியும். விட்டமின் டி மீனில் அதிகமாக இருப்பதால், இந்த மீனை தொடர்ந்து உட்கொண்டு வர நம்மால் ஆழ்ந்த தூக்கத்தை பெற்று ஆரோக்கியமான வாழ்வையும் பெற முடியும்.
முடக்கு வாதம்
நம் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை முடக்குவாதம் என்று கூறுகிறோம். மூட்டுவலி உள்ளவர்கள், மூட்டில் வீக்கம் உள்ளவர்கள், மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது விரைவில் குறைய ஆரம்பித்துவிடும்.
நீரிழிவு
நீரிழிவு நோய் உள்ளவர்கள் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் இந்த நோய் தடுக்கப்படுகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக்கப் படுகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளுக்கு சென்று அவர்களின் பார்வையை சீராக வைக்கிறது. தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் தன்மையும் மீன் உண்பதால் கிடைக்கிறது.
குறைப்பிரசவம்
மீன்களை அதிகமாக உண்பதால் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. கர்ப்பிணி பெண்கள் மீன்களை ஒரு குறிப்பிட்ட அளவு முறையில் சாப்பிட்டு வரவேண்டும். சில மீன்களுக்கு சூடு தன்மை அதிகமாக இருக்கும். அந்த மீன்களை எல்லாம் அவர்கள் முழுமையாக தவிர்ப்பது நல்லது. மாதம் இரண்டு முறையோ, அல்லது மூன்று முறையோ பத்தியமாக கிடைக்கும் மீனை சாப்பிட்டு வரலாம். இதன்மூலம் குறைபிரசவம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
பளபளப்பான மேனி
மீனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் நம் சரும பிரச்சினைகள் குறைந்து சருமம் பொலிவுடன் காணப்படும்.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள்
சில பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் குமட்டல், வாந்தி, தலைவலி, மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. இந்த பிரச்சனைகள் இருந்து பெண்கள் தங்களை காத்துக்கொள்ள, மாதவிடாய் வரும் சமயங்களில் மீனை சாப்பிட்டு வருவதால் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
மீனைப் பற்றிய சில தகவல்கள்.
1. மீன் வகைகளில் குறிப்பாக டூனா, சால்மோன், சார்டினஸ், ஸ்வார்ட்பிஷ், மேக்கரில் போன்ற மீன்களில் அதிக அளவில் ஒமேகா-3 நிறைந்திருப்பதால் இதனை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
2. வாரத்திற்கு ஒரு முறை மீனை உண்டுவந்தால் மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களுக்கு 10% முதல் 15% வரை பிரச்சினைகள் குறையும்.
3. தாய்மார்களுக்கு பால் சுரக்கவில்லை என்றால் பால் சுறாவில் குழம்பு வைத்து கொடுப்பார்கள். சுறா மீனில் கொழுப்பு இல்லை. பெண் சுறாக்களை வாங்குவது நல்லது. ஆண் சுறாமீனை அவ்வளவு சுலபமாக வேகவைத்து விட முடியாது.
4. குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் நெத்திலி மீனை உண்ணக்கூடாது. அதில் இருக்கும் சிறிய முட்கள் நேரடியாக பாலில் கலந்து குழந்தைக்கு வயிற்று உபாதையை ஏற்படுத்தும் என்று கூறுவார்கள்.
5. கடலில் இருந்து கிடைக்கப்படும் சங்கு, சிப்பி, ஆளி போன்ற மீன் வகைகள் மனிதனுக்கு வரக்கூடிய மூலவியாதி வரவிடாமல் தடுக்கிறது. மூல வியாதி உள்ளவர்களுக்கு அந்த நோயை குணப்படுத்தும் வழிவகுக்கிறது. அவ்வளவு குளிர்ச்சி தன்மை உடையது இந்த மீன்கள்.