புதன், 2 பிப்ரவரி, 2022

தினமும் இளநீர் அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

தினமும் இளநீர் அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

தென்னைமரம் ஆசியாவை பூர்வீகமாக கொண்ட ஒரு மரமாகும். தற்போது உலகெங்கிலும் வெப்பமண்டல நாடுகளில் அதிகம் வளர்க்கப்படும் ஒரு பயிர் மரமாக தென்னை மரம் இருக்கிறது. தென்னை மரத்தினால் மனிதர்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. நமது சமையலில் அதிகம் உபயோகிக்கப்படும் தேங்காய் இந்த தென்னை மரத்தில் இருந்தே கிடைக்கிறது. அந்த தென்னை மரத்தில் தேங்காய் காயாக இருக்கும் போது இளநீர் எனப்படுகிறது. இளநீர் மனிதர்களுக்கு தென்னை மரம் அளிக்கும் இயற்கையின் வரப்பிரசாதமாகும். அந்த இளநீரை மனிதர்கள் பருகுவதால் ஏற்படும் பல்வேறு உடல்நல ரீதியிலான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ilaneer

இளநீர் பயன்கள்

சோரியாசிஸ் தோல் நோய் நீங்க 

சோரியாசிஸ் எனப்படும் தோல் நோய் பரம்பரை காரணமாகவும், தோலில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் முறையாக வெளியேறாத காரணத்தினாலும் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இளநீர் தோல் சம்பந்தமான வியாதிகள் அனைத்தையும் குறிப்பாக சோரியாசிஸ் வியாதி ஏற்படாமல் தடுப்பதில் சிறப்பாக செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. நமது உடலில் இருக்கின்ற நச்சுக்கள் அனைத்தும் வியர்வை வழியாக வெளியேறச் செய்து தூய்மைப் படுத்துவதால் தோலில் சோரியாஸிஸ் ஏற்படுவதற்கான காரணிகளாக இருக்கும் நச்சுக்கள் தங்காமல் வெளியேற்றி சருமத்தை காக்கிறது.

உற்சாக பானம் 

உடலை கடினமாக வருந்தச் செய்யும் உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றால் வியர்வை அதிகம் வெளியேறி, அதில் உடலுக்கு தேவையான உப்புக்களும் சேர்ந்து வெளியேறுகிறது. இதில் எலெக்ட்ரோலைட் எனப்படும் உப்புக்கள் உடலின் இயக்கத்திற்கும், சுறுசுறுப்புக்கும் காரணியாக இருக்கிறது. தினமும் இளநீர் குடிப்பவர்களுக்கு உடலில் இந்த எலக்ட்ரோலைட் உப்புச்சத்துக்கள் கிடைக்கப் பெற்று, உடலுக்கு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தந்து சிறப்பான உடல் இயக்கத்திற்கு வழிவகை செய்கிறது உடல் களைப்பையும் சீக்கிரத்தில் போக்குகிறது.

ilaneer

கொலஸ்ட்ரால் குறைய 

இளநீரை அதிகம் பருகி வருபவர்களுக்கு ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவு வெகுவாக குறைவதாக மேலை நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் சத்துக்களை ரத்தத்தில் கலந்து செல்வதை இளநீர் ஊக்குவிக்கிறது. மேலும் இளநீரை தொடர்ந்து அருந்துபவர்களுக்கு ஹைபர்டென்சன் எனப்படும் அதீத மன அழுத்தம் போன்றவற்றைக் குறைத்து இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.

மலச்சிக்கல், செரிமான கோளாறுகள் நீங்க 

நெடுநாள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுருபவர்களுக்கு சிறந்த இயற்கை பானமாக இளநீர் இருக்கிறது. இளநீரில் நார் சத்து அதிகம் உள்ளது. இதை தினமும் அருந்தி வருபவர்களுக்கு குடற்பகுதியில் இருக்கின்ற செரிமான அமிலங்கள் சுரப்பை சீராக்கி, உணவு எளிதில் ஜீரணமாக உதவுகிறது. வயிறு குடல் போன்ற உறுப்புக்கள் அனைத்தும் தூய்மையாகிறது. சீதபேதி போன்ற கடுமையான வயிற்றுப் போக்கால் உடலின் அத்தியாவசிய சத்துக்கள் மற்றும் உப்புகளை இழந்தவர்கள் இளநீரை பருகி வர வயிற்றுப் போக்கு நிற்பதோடு, ரத்தத்தில் இருந்து வியர்வை சிறுநீர் வழியாக வெளியேறிய உப்புக்கள், தாதுக்கள் அனைத்தும் மீண்டும் உடலுக்கு கிடைக்கப்பெற உதவுகிறது.

ilaneer

மது போதை தெளிய 

அதிகளவில் மது அருந்துபவர்களுக்கு அளவுக்கு மீறியே போதை உண்டாகி தலைவலி, கிறுகிறுப்பு, வாந்தி போன்றவை ஏற்படுகிறது. இதனால் இரத்தத்தில் இருக்கின்ற அத்தியாவசிய தாது உப்பான பொட்டாசியம் அதிக அளவில் வெளியேறுகிறது. அதீத மது போதைக்குள்ளானவர்களின் போதைதெளிய இளநீரை சிறிது, சிறிதாக குடித்து வந்தால் உடல் இழந்த பொட்டசியம் சத்துக்களை மீண்டும் பெறுவதோடு அதிக போதையால் ஏற்படும் தலைவலி, கிறுகிறுப்பு தன்மை போன்றவை நீங்கி போதை தெளியும்.

நீரிழிவு நோய் கட்டுப்பட 

இளநீரில் எல் – ஆர்ஜினைன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது நீரிழிவு குறைபாட்டுக்கெதிராக செயல் புரியும் ஒரு வேதிப் பொருளாக இருக்கிறது. இந்த எல் – அர்ஜினைன் நிறைந்த இளநீரை குடிக்க நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உருவாகும் அதீத குளுக்கோஸின் அளவை குறைத்து, நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. மேலும் இளநீரில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் சத்துக்களும் அதிக அளவு நார்ச் சத்துக்களும் நிறைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த இயற்கை பானமாக இளநீரை இருக்கிறது.

ilaneer

சிறுநீரக கற்கள் கரைய 

நாம் சாப்பிடும் உணவுகள் மட்டும் அருந்தும் பானங்களில் அதிக அளவில் இருக்கின்ற பொட்டாசியம், சிட்ரைட் மற்றும் குளோரின் மூலப் பொருட்கள் நமது சிறுநீரகங்களில் தங்கி கட்டியாக மாறி, சிறுநீரக கல்லாக உருமாறுகிறது. இத்தகைய சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் ஆரம்பத்திலேயே தடுக்க இளநீரை அடிக்கடி பருகுவது அவசியமாகும். இளநீரில் மேற்கூறிய பொட்டாசியம் குளோரைடு மற்றும் வேதிப் பொருட்கள் கட்டியாக மாறுவதை தடுத்து, உப்புபொருட்களை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றி, சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை போன்றவற்றின் சீரான செயல்பாட்டையும் காக்கிறது.

முகப்பரு நீங்க 

இளநீர் காரத்தன்மை கொண்ட ஒரு பானமாக இருக்கிறது. எனவே இயற்கையாகவே இளநீரில் கிருமிநாசினி தன்மை அதிகமுள்ளது. அதிலும் குறிப்பாக லாரிக் அமிலம் இளநீரில் அதிகளவில் இருக்கிறது. இந்த லாரிக் அமிலம் முகப்பருக்கள் ஏற்படாமல் தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. முகங்களில் ஏற்கெனவே ஏற்பட்டிருக்கின்ற முகப்பருக்களை சீக்கிரமாக மாற்றி புதிதாக முகப்பருக்கள் ஏதும் தோன்றாமல் முக அழகை மேம்படுத்துகிறது.

ilaneer

நீர்சத்து 

கோடைக்காலங்களில் உடலில் நீர் மற்றும் உப்புச் சத்து இழப்பு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இக்காலங்களில் உடலில் நீர் சத்து மிகுதியாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்கு இளநீர் ஒரு சிறந்த பானமாக இருக்கிறது. இளநீரில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற உடலுக்கு அத்தியாவசிய தாது சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அடிக்கடி இளநீர் அருந்துவதால் வியர்வை வழியாக அத்தியாவசிய பொருட்கள் இழப்பை ஈடு செய்து உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது. ரத்த ஓட்டத்தை சீரான அளவில் வைத்து உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது.

தோல் புற்று நோய் 

இளநீரில் சைட்டோகைனின்கள் அதிகமுள்ளது. இந்த சைட்டோகைனின் பெரும்பாலான தாவரங்களில் சுரக்கின்ற ஒரு ஹார்மோன் வகையாகும். சைட்டோகைனின் தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து இளமை தோற்றத்தை மேலோங்கச் செய்கிறது. மேலும் தோலில் வழவழப்புத் தன்மையையும், பளபளப்பான தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த சைட்டோகைனின் வேதிப்பொருளுக்கு புற்றுநோயை அதிலும் குறிப்பாக தோல் புற்று நோய்களை எதிர்த்து செயலாற்றக் கூடிய ஆற்றலும் அதிகமுள்ளது.