Skip to main content

தினசரி உணவில் உப்பு சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?

தினசரி உணவில் உப்பு சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?

உப்பு இயற்கை அளித்திருக்கும் ஒரு மிகச் சிறந்த வரப்பிரசாதமாகும். மனிதன் நெருப்பை கண்டறிந்து சமைத்து உண்ணத் தொடங்கிய சில காலங்களிலேயே உணவு தயாரிப்பில் உப்பை பயன்படுத்த தொடங்கி உள்ளான். கடல் உப்பு, பாறை உப்பு போன்ற பல உப்பு வகைகள் இருக்கின்றன. என்றாலும் தற்காலத்தில் மனிதர்கள் அதிக அளவில் பயன்படுத்துவது கடலில் இருந்து பெறப்பட்டு, தொழில்நுட்ப ரீதியில் அயோடின் கலந்து உருவாக்கப்படும் உப்பு ஆகும். உப்பு உணவில் சுவையை கூட்டுவதை தாண்டி, உணவுப் பண்டங்களை கெடாமல் வைத்திருக்கவும், மனிதர்களின் நோய்களை தீர்க்கும் மருத்துவ சிகிச்சைகளில் கிருமிநாசினி போன்று செயல்படுவது போன்ற பலவிதமான அற்புத செயல்பாடுகளை கொண்ட ஒரு இயற்கை பொருளாக இருக்கிறது. அப்படியான உப்பு தினமும் உணவில் சேர்த்து உண்பதால் எத்தகைய நன்மைகளை நாம் பெற முடியும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

salt

உப்பு பயன்கள்

தைராய்டு சுரப்பி

மனிதர்களின் உடலில் இருக்கின்ற நாளமில்லா சுரப்பிகளில் தைராய்டு சுரப்பி முக்கியமானதாகும். இந்த தைராய்டு சுரப்பி சுரக்கின்ற தைராக்சின் ஹார்மோன் மனிதர்களின் உடலில் இதயத் துடிப்பு, தசைகளின் இயக்கம், செரிமானத் திறன் ஆகியவற்றின் சீரான இயக்கத்திற்கு அவசியமானதாக இருக்கிறது. இத்தகைய தைராய்டு சுரப்பி நன்றாக இயங்க நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் உப்பில் அயோடின் சத்து இருப்பது அவசியமாகும். எனவே அயோடின் சரியான அளவில் சேர்க்கப்பட்ட உப்பை உணவிற்கு பயன்படுத்துவதால் தைராய்டு ஹார்மோன் குறைபாடு ஏற்படாமல் தடுத்து, உடல் நலம் சீராக இருக்க உதவுகிறது.

நீர்சத்து இழப்பு தடுக்க

நமது உடலில் எப்போதும் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக ரத்தத்தில் இருக்கின்ற எலக்ட்ரோலைட் சத்துக்கள் உடலில் வியர்வை மற்றும் சிறுநீர் வழியே அதிகம் வெளியேறுகிறது. கால்சியம், பொட்டாசியம், சோடியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புகள் அந்த எலக்ட்ரோலைட் சத்துகளாக இருக்கின்றன. காலரா மற்றும் சீத பேதி ஏற்படும் சமயங்களில் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதோடு உப்பு மற்றும் சர்க்கரையின் சத்திழப்பு உண்டாகி, உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்துகின்றன. இதை ஈடுகட்ட நாம் உணவில் பயன்படுத்தும் உப்பு மற்றும் சர்க்கரை சரிவிகிதத்தில் நீரில் கலந்து பருகுவதன் மூலம் உடலின் அத்தியாவசிய உப்புச்சத்திழப்பை தடுத்து, உடல் உறுப்புகள் சீராக செயல்படுவதை உறுதி செய்ய முடியும்.

salt

ரத்த அழுத்த குறைபாடுகள்

30 வயதிற்கு பிறகும் 40 வயதுகளை நெருங்கும் காலத்தில் பலருக்கு ரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படுகின்றது. ரத்த அழுத்தத்தில் உயர் ரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் என இருவகை உள்ளன. உயர்ந்த ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவர்கள் அறிவுறுத்திய அளவின்படி உப்பை உணவில் சேர்ப்பதால் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க முடியும். அதே நேரம் குறைந்த ரத்த அழுத்தப் பிரச்சினைகள் இருப்பவர்கள், உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட பானங்கள், உணவுகள் அருந்துவதன் மூலம் இந்த குறைந்த ரத்த அழுத்த பிரச்சினையை தவிர்க்க முடியும்.

நீரிழிவு ஏற்படாமல் தடுக்க

ஒருவரின் உடல் நலம் சீராக இயங்க அவரின் உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் இன்சுலின் அளவு சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். சராசரிக்கும் குறைந்த அளவு உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் இன்சுலின் ஹார்மோன் சுரப்பில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது டைப் 2 வகை நீரிழிவு நோய் ஏற்பட வழிவகை செய்கிறது. எனவே அன்றாட உணவில் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவிலான உப்பு சேர்ப்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

salt

கர்ப்பிணி பெண்கள்

கருவுற்ற பெண்கள் மற்ற அனைத்து விடயங்களில் கவனமாக இருப்பது போல அன்றாடம் சாப்பிடும் உணவு விடயத்திலும் தனி கவனம் செலுத்துவது அவசியமாகும். கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு சரியாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய நோய்கள் சத்துக் குறைபாடுகள் போன்றவற்றை அறவே தடுக்கிறது. மேலும் கருவில் வளரும் என்று குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழி வகை செய்கிறது.

ஹீட் ஸ்ட்ரோக்

உடல் அதிக வெப்பம் அடையும் போது உஷ்ணத்தை வெளியேற்ற முடியாமல், அதிக அளவு வியர்வை சிந்தி அதில் அத்தியாவசிய உப்பு தாதுக்கள் வெளியேறுவதால் உடலின் உள்ளுறுப்புகள் மற்றும் மூளையின் செயல்பாடுகள் நின்று மயக்க நிலையை உண்டாக்கும் குறைபாடே ஹீட் ஸ்ட்ரோக் எனப்படுகிறது. இந்த ஹீட் ஸ்ட்ரோக் வயதானவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுவதாக இருக்கிறது. எனவே அவ்வப்போது உடலின் உப்புத் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான உணவுகளை இவர்கள் உட்கொண்டு வருவதால் ரத்தத்தில் எலக்ட்ரோலைட் உப்பு தாதுக்களின் சமநிலை காக்கப்பட்டு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படாமல் தடுக்கிறது.

salt

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் நீங்க

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனப்படும் நோய் மனிதர்களின் உடலில் குறைபாடுள்ள ஒரு புரதசத்தால் ஏற்படுவதாகும். இந்த நோய் மனித செல்களில் உப்பு மற்றும் நீர் உட்செல்வதையும், வெளியேறுவதையும் முற்றிலும் தடுத்து விடுவதால் கெட்டியான மாவு போன்ற பதத்தில் சிலருக்கு வியர்வை உண்டாகும் நிலை ஏற்படுகிறது. சிறுகுழந்தைகளுக்கு இந்த சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் குறைபாடு ஏற்பட்டால் அவர்களின் உடலுக்கு கூடுதலான உப்புத் தேவையை உண்டாகிறது. தகுந்த மருத்துவரை கலந்தாலோசித்து அவர் அறிவுறுத்தியபடி உப்பை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் கூடிய விரைவில் இந்த சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் குறைபாட்டை போக்க முடியும்.

பற்கள், ஈறுகள் நலம்

பற்கள் மற்றும் ஈறுகள் நலமாக இருக்க சிறந்த இயற்கை நிவாரணியாக உப்பு இருக்கிறது. இளம்சூடான நீரில் அரை டீஸ்பூன் உப்பு கலந்து வாயில் இட்டு நன்றாக கொப்பளித்து வர ஜலதோஷத்தால் ஏற்படும் பல் ஈறுகளின் வீக்கம், வலி போன்றவை நீங்கும். ஈறுகளில் கிருமிகளால் ஏற்பட்ட புண்களில், கிருமிகள் அழிந்து அப்புண்கள் விரைவில் குணமாகும். அதுபோன்றே இளம் சூடான நீரில் கால் டீஸ்பூன் உப்பு மற்றும் பேக்கிங் சோடா கலந்து வாய் கொப்பளித்து வர பற்களின் இடுக்குகளில் தங்கியிருக்கின்ற கிருமிகள் அழியும். இதனால் பற்சொத்தை, பற்களின் எனாமல் வலுவிழப்பது போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் பற்கள், ஈறுகள் மற்றும் வாய் சுகாதாரத்தை மேம்படுத்துகிறது.

Salt

தொண்டை கட்டு நீங்க

குளிர் காலங்களில் தொற்றுக்கிருமிகளால் ஜலதோஷம் ஏற்படுகின்ற போது பலருக்கும் தொண்டை கட்டிக்கொண்டு சரியாக பேச முடியாமல் போகிறது. மிகுந்த வலியையும் ஏற்படுத்துகிறது. அப்படி தொண்டை கட்டு மற்றும் வலியால் அவதிப்படுபவர்கள், சிறிது வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் உப்பு கலந்து வாயில் ஊற்றி, அந்நீரை விழுங்காமல் தொண்டைக்குள்ளே வைத்து சிறிது நேரம் கொப்பளித்து, பிறகு துப்பி வருவதால் தொண்டையில் இருக்கின்ற ஜலதோஷம் ஏற்படுத்தும் கிருமிகள் அழிந்து, தொண்டை கட்டு மற்றும் வலி விரைவில் நீங்குகிறது.

பாத வெடிப்புகள், வலி நீங்க

நெடுந்தூரம் நடப்பவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு பாதங்களில் வலி மற்றும் அயர்ச்சி ஏற்படுகிறது. இதற்கு சிறந்த தீர்வாக உப்பு கலந்து நீர் இருக்கிறது. ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதில் ஒரு டீஸ்பூன் உப்பை போட்டு நன்கு கலந்து, நம் இரு பாதங்களையும் அந்த வெதுவெதுப்பான நீர் உள்ள பாத்திரத்தில் குறைந்தது 20 நிமிடங்கள் வைத்திருப்பதால் பாதங்களில் ஏற்பட்டிருக்கின்ற வலி போன்றவை நீங்கும். மேலும் பாதங்களில் ஏற்பட்டுள்ள பித்த வெடிப்புகளில் தங்கியிருக்கும் கிருமிகள் அழிந்து, பாத வெடிப்புகள் விரைவில் குணமாகிறது.

Comments