Advertisement

மழைக்கால நோய்கள் சித்த மருத்துவம்

மழைக்கால நோய்கள் சித்த மருத்துவம்

உயிர்கள் அனைத்தும் உயிர்வாழ அவசியமானது தண்ணீர். உலகில் வாழும் அனைத்து உயிர்களின் குடிநீர் தேவையை பெருமளவு பூர்த்தி செய்ய கூடிய ஒரு இயற்கை அற்புதமாக மழை இருக்கிறது. மழைக்காலங்கள் என்றாலே ஒரு சில நோய்கள் ஏற்படும் காலமாகவும் இருக்கிறது. மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள கூடிய சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.

மழைக்கால நோய்கள் சித்த மருத்துவம்

உணவு

மழைக்காலங்களில் நமது அன்றாட உணவு சற்று சூடான பதத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் முடிந்த வரை தெருவோர கடைகள், சுகாதாரம் பேணப்படாத கடைகளில் இருக்கும் உணவு பண்டங்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாவு சத்து சற்று அதிகம் உள்ள உணவுகளை இக்காலங்களில் சற்று கூடுதலாக சாப்பிடலாம்.

நீர்

பெருமழைக்காலங்களில் பல இடங்களில் கழிவு நீர் வாய்க்கால்களில் நீர்பெருக்கு அதிகரித்து, மக்கள் குடிக்கின்ற நீரிலும் அக்கழிவு நீர் கலக்கின்ற நிலை ஏற்படுகிறது. அந்நீரில் இருக்கும் நுண்ணுயிரிகள் குடிக்கின்ற நீரில் கலப்பதால் பல வித நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகிறது. எனவே மழைக்காலங்களில் நன்றாக காய்ச்சி ஆற வைக்கப்பட்ட குடிநீரை பருகி வருவது உடல் நலத்திற்கு நல்லது.

உடைகள்

மழைக்காலங்களில் சூரியனின் வெப்பம் அதிகம் கிடைக்காத காரணத்தால் துவைத்து காயவைக்கப்பட்ட துணிகளில் ஈரம் ஆறாமலேயே இருக்கும். துணிகளை மின்விசிறிகளை ஓடவிட்டு காயவைத்து பிறகு அணிந்து கொள்வது நல்லது. ஈரமான துணிகளை அணிந்து கொள்வதால் படர் தாமரை, தோல் அரிப்பு போன்ற சருமம் சம்பந்தமான நோய்கள் இக்காலங்களில் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.

கொசுக்கள்

நமது நாட்டில் மழைக்காலங்கள் கொசுக்களின் உற்பத்தி காலமாக இருக்கிறது. மலேரியா, டெங்கு, யானைக்கால் வியாதி, சிக்குன்குனியா போன்றவை கொசுக்களினால் ஏற்படும் நோய்களாகும். இதில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் தன்மை கொண்டது. வீட்டில் கொசுக்கள் சேராமல் இருக்க நொச்சி செடிகளின் இலைகளை கொண்டு புகைபோடுவதால் கொசுக்களை விரட்டலாம். ஆரஞ்சு பழங்களின் தோல்களை நிழலில் உலர்த்தி, பின்பு அத்தோல்களை கொளுத்தி புகை போட்டால் கொசுத்தொல்லை நீங்கும். நிலவேம்பு கசாயத்தை அவ்வப்போது அருந்துவது மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும் சித்த மருத்துவ முறையாகும்.

குளியல்

மழைக்காலங்களில் அதிகம் வியர்க்காது என்பதால் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக குளிப்பதை சிலர் தவிர்த்து விடுகின்றனர். இக்காலங்களில் உடலில் வியர்வை போன்றவை ஏற்படவில்லை என்றாலும் கூட சீதோஷண நிலையின் காரணமாக சருமம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க, தினமும் இருமுறை இதமான வெண்ணீரில் குளிப்பது பொதுவாக உடலாரோக்கியத்திற்கு நல்லது.

குழந்தைகள்

மழைக்காலங்களில் மற்ற எல்லா வயதினரையும் விட சுலபமாக நோய் பாதிப்பிற்குள்ளாவது குழந்தைகள் தான். எனவே பத்து வயதிற்கு குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு மழைக்கால பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்வது நல்லது. அவர்களின் உணவு, உடை, அருந்தும் நீர், உடல் சுகாதாரம் போன்றவற்றில் தூய்மை பேணப்படவேண்டியது மிகவும் அவசியம்.

சளி

மழையில் நனைவதாலும், கிருமி தோற்றாலும் சிலருக்கு சளி அல்லது ஜலதோஷம் ஏற்படுகின்றது. இப்பிரச்சனை ஏற்பட்டவர்கள் எடுத்த உடனே ஆங்கில வழி மருந்துகளை நாடாமல், மூன்று வேலையும் வெதுவெதுப்பான நீர் அருந்துவதால் தொண்டை, நுரையீரலில் இருக்கும் சளி ஏற்படுத்தும் கிருமிகள் அழியும். மூக்கில் தொடர்ந்து நீர் ஒழுகிக்கொண்டிருக்கும் நபர்கள் ஒரு வெள்ளை காகிதத்தை கொளுத்தி அப்புகையை உங்கள் மூக்கால் சுவாசித்தால் மூக்கில் நீர் ஒழுகுவது நிற்கும்.

மூக்கடைப்பு, சுவாச பிரச்சனைகள்

சளி அல்லது ஜலதோஷம் பீடிப்பதால் பலருக்கும் மூக்கடைப்பு பிரச்சனை உண்டாகிறது. சளி நுரையீரலில் பரவுவதால் சிலருக்கு மார்பு சளி ஏற்பட்டு மூச்சிரைப்பு, கடும் இருமல் போன்றவை உண்டாகிறது. இச்சமயங்களில் ஒரு வெற்றிலையில் மூன்று மிளகு வைத்து, வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிடுவதால் மேற்கூறிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். துளசி, கற்பூரவல்லி செடிகளின் இலைகளை மென்று சாப்பிடுவதும் சிறந்த நிவாரணமாகும்.

கபம்

மழைகாலங்களில் உடலில் இருக்கும் மூன்று தன்மைகளான வாதம், பித்தம், கபம் போன்றவற்றில் கபம் சார்ந்த பாதிப்புகளான சுவாச சம்பந்தமான நோய்கள், இருமல், தொண்டைப்புண் போன்றவை அதிகம் ஏற்படுகிறது இக்காலங்களில் கண்டங்கத்திரி காய்கள் கொண்டு செய்யப்பட்ட குழம்பு, கூட்டு போன்றவற்றை சாப்பிடுவதால் கபம் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.

கொள்ளு ரசம்

கொள்ளு தானியத்தில் நோய் தொற்றை எதிர்த்து போராடும் சக்தி அதிகம் உள்ளது. மழைக்காலங்களில் கொள்ளு ரசம் தயாரித்து அவ்வப்போது பருகி வந்தால் ஜலதோஷம், தொண்டைக்கட்டு, இருமல் போன்றவை முற்றிலும் நீங்கும். இக்கொள்ளு ரசத்தை குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்து வந்தால் மழைக்காலங்களில் நோய்கள் ஏற்படாதவாறு தடுக்கலாம்.