உங்கள் உணவில் தினமும் நெய் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?
நமது நாட்டின் பாரம்பரியமான மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் தாவரங்கள், மூலிகைகள் போன்றவற்றின் மருத்துவ குணங்களை பற்றி மட்டும் கூறாமல் விலங்குகளிலிருந்து பெறப்படும் பொருட்களால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றியும் கூறியிருக்கின்றனர். அந்த வகையில் அக்காலம் முதலே பசும்பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களையும் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அந்தப் பசும்பாலில் இருந்து வெண்ணையை கடைந்தெடுத்து, அதை உருக்கி நெய் தயாரிக்கப்படுகிறது. நெய் பல அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதை கண்ட நம் முன்னோர்கள் அதை உயர் தரமான உணவுபொருளாகவும் மற்றும் பல்வேறு நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தினர். அப்படியான அற்புதமான உணவாக இருக்கும் நெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நெய் பயன்கள்
பால் ஒவ்வாமை
சில நபர்களுக்கு பால் அருந்துவதாலும், பால் கொண்டு செய்யப்பட்ட உணவு பொருட்கள் உண்டாலும் ஏற்படும் ஒவ்வாமை நிலையை லாக்டோஸ் இண்டாலரன்ஸ் (Lactose Intolerance) என அழைக்கின்றனர். இந்த ஒவ்வாமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் பாலில் இருக்கும் கேசின் எனப்படும் கொழுப்பு சத்தாகும். ஆனால் நெய் என்பது பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட வெண்ணையை உருக்கி செய்யப்படுவதால் நெய்யில் இந்த கேஸின் கொழுப்பு சத்து இல்லாமால் போகிறது. எனவே இந்த லாக்டோஸ் இண்டாலரன்ஸ் குறைபாடு இருப்பவர்களும் நெய் தாராளமாக சாப்பிடலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ
மனிதர்களின் வாழ்வில் அவர்களின் உடல் சிறப்பாக செயலாற்றவும், உடலில் நோய் எதிர்ப்புத் திறனும் வலுப்பெறவும், இதயம் மற்றும் கல்லீரல் சிறப்பாக செயல்படவும் வைட்டமின் ஏ சத்து அத்தியாவசியமாகிறது. அதேபோல் கண் பார்வை தெளிவாக இருக்கவும், எலும்புகள் வலிமை பெறவும் வைட்டமின் ஈ சத்து அதிகம் தேவைப்படுகிறது. நெய்யில் இந்த இரண்டு வைட்டமின் சத்துக்களும் அதிகம் நிறைந்திருக்கிறது. எனவே தினந்தோறும் உணவில் சிறிது நெய் சேர்த்து சாப்பிடுவதால் மேற்கூறிய இரண்டு சக்திகளும் கிடைக்கப் பெற்று உடல் ஆரோக்கிய நிலை மேம்படுகிறது.
வைரஸ் கிருமிகள் அழிய
புற்களை மட்டுமே தின்று வளரும் பசுக்களில் இருந்து பெறப்படும் பாலை வெண்ணெய் ஆக்கி, அந்த வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் நெய்யில் லினோலிக் ஆசிட் மற்றும் சங்கிலி தொடர் கொழுப்பு அமில வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இந்த வேதிப்பொருட்களுக்கு வைரஸ் கிருமிகளை எதிர்த்து செயல்புரியும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்ததாக இருக்கிறது. இவை உடலை பாதிக்கும் எத்தகைய வைரஸ் கிருமிகளையும் எதிர்த்து செயல் புரிந்து உடல் நோய்வாய்ப்படாமல் தடுக்கிறது.
ஊட்டச்சத்து உணவு
தேங்காய் எண்ணையை போலவே நெய்யில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. நெய்யில் சங்கிலி தொடர்பான கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இந்த கொழுப்பு அமிலங்களை உடலில் இருக்கும் கல்லீரல் நேரடியாக செரிமானம் செய்து, அவற்றை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுகிறது. அதிக உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் நெய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் உடலுக்கு அதிக சக்தி கிடைக்க உதவுகிறது.
உடல் எடை குறைய
நெய் மிதமான சங்கிலித்தொடர் கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்தது என்பதை ஏற்கனவே அறிவோம். எந்த விதமான சங்கிலித் தொடர் கொழுப்பு அமிலங்கள் உடலில் அதிகளவில் இருக்கின்ற கொழுப்புகளை எரித்து, உடலுக்கு தேவையான சத்துக்களாக மாற்றுகிறது. இத்தகைய தேவையற்ற கொழுப்புச் சத்து குறைவதால் உடல் எடை சீக்கிரமாக குறைகிறது. எனவே உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் நெய் கலந்த உணவுகளை தாராளமாக சாப்பிடலாம்.
பியூடைரிக் அமிலம்
மற்ற உண்ணத்தகுந்த எண்ணெய் வகைகள் போலல்லாமல் நெய்யில் பியூடைரிக் அமிலம் (Butyric acid) எனப்படும் சிறிய சங்கிலித் தொடர் கொழுப்பு அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. இந்த பியூடைரிக் அமிலம் உணவு செரிமானம் ஆவதற்கு பெருமளவில் உதவுகிறது. மனிதர்களின் வயிற்றின் குடற்சுவற்றில் உணவு செரிமானம் ஆவதற்கு உதவும் நன்மை செய்யும் பாக்டீரியா நுண்ணுயிர்கள், உணவில் இருக்கும் நார்ச்சத்தை பியூடைரிக் அமிலமாக மாற்றிக் கொள்கிறது. இந்த நுண்ணுயிரிகளுக்கு வலுசேர்க்க பியூடைரிக் அமிலம் நிறைந்த நெய்யை அடிக்கடி சாப்பிடுவதால் உணவு செரிமானம் ஆவதில் குறைபாடுகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
நமது உடலில் வெளிப்புறத்திலிருந்து நுழைகின்ற நுண்ணுயிரிகளால் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வேதிப்பொருட்களில் கில்லர் டி செல்கள் அதிகம் இருக்கின்றன. இத்தகைய நோய்த் தொற்றுக் கிருமிகளை அழித்து உடல் நலத்தைக் காக்கும்.நெய்யை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இந்த கில்லர் டி செல்களின் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் நோயெதிர்ப்பு சக்தி பன்மடங்கு வலுவடைந்து தொற்று நோய்கள், நுண்ணுயிர் தாக்குதல்கள் ஏற்படாமல் காக்கிறது.
பசியுணர்வு அதிகரிக்க
நன்கு பசியுணர்வு ஏற்பட்ட பின் உணவு சாப்பிடுவதால் எளிதில் செரிமானமாகி, உடலுக்கு சக்தியைத் தந்து நோய் நொடிகள் இல்லாத தன்மையை ஏற்படுத்துகிறது. நெய்யில் கேஸ்ட்ரிக் அமிலங்கள் அதிகம் இருக்கிறது. நெய்யைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால், பசி உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. வயிற்றில் சேரக்கூடிய எத்தகைய உணவுகளை செரிக்க கூடிய, செரிமான அமிலங்கள் சமசீர் தன்மையை காக்கிறது. எனவே வயிறு மற்றும் குடல்களை வலுப்பெறச் செய்து உடல் நலத்தை மேம்படுத்துகிறது.
சாத்வீக உணவு
நாம் சாப்பிடும் உணவுகள் கூட நமது மனநிலையை மற்றும் குண நலன்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது என பண்டைய ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. விலங்குகளின் மாமிசங்கள் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் உணவுகள் சாத்வீக உணவுகள் என அழைக்கப்பட்டன. பசும்பாலிலிருந்து நெய் தயாரிக்கப்பட்டாலும், அந்த நெய் எந்த ஒரு விலங்குகளையும் கொல்லாமல் பெறப்படுவதால் சாத்வீக உணவு பட்டியலில் நெய் சேர்க்கப்படுகிறது. மேலும் இந்த நெய்யை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் அதிகரிக்கிறது. கோபங்கள், தாபங்கள் போன்றவை குறைந்து சாத்வீக குணங்கள் உண்டாகிறது.
தீக்காயம் குணமாக
தீ விபத்துகளில் ஏற்படும் சிறிய அளவு தீக்காயங்கள் கூட மிகுந்த வேதனையைத் தருவதாக இருக்கிறது. தீக்காயங்களுக்கு சிறந்த இயற்கை மருத்துவ களிம்பாக பண்டைய காலத்திலேயே நெய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தீக்காயம் பட்ட இடங்களில் தினமும் சுத்தமான பசு நெய்யை தடவி வருவதால் காயத்தில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சல் தன்மை குறைவதோடு, விரைவில் தீக்காயங்கள் குணமாகி தீக்காயங்களால் ஏற்படும் அழுத்தமான தழும்புகள் உருவாவதையும் தடுக்கிறது.