விஜய் சேதுபதியின் புதிய படம் ஒன்றில், அவருக்கு ஜோடியாக நடிக்க கிருத்தி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. இந்த தகவலை கொஞ்சம் லேட்டாக தெரிந்துகொண்ட விஜய் சேதுபதி, உடனடியாக படக்குழுவினரை தொடர்புகொண்டு, கிருத்தி ஷெட்டியுடன் நடிக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியான படக்குழு, விஜய் சேதுபதியிடம் மீண்டும் பேசிப் பார்த்துள்ளனர்.
ஆனால், அவரோ முடியவே முடியாது என்றுவிட்டாராம். அதாவது, உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் கிருத்தி ஷெட்டிக்கு அப்பாவாக நடித்தது விஜய் சேதுபதி தான். அதனால், மகளாக நடித்த கிருத்தி ஷெட்டியுடன் ஜோடியாகவும், ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிப்பது முடியாது எனக் கூறிவிட்டாராம். மேலும் உப்பென்னா க்ளைமேக்ஸ் சீனில், கிருத்தி ஷெட்டிக்கு தன்னை அப்பா என அழைப்பதில் தயக்கம் இருந்தது.
அப்போது விஜய் சேதுபதி கிருத்தி ஷெட்டியிடம், எனக்கு உன் வயதில் மகன் இருக்கிறான். அதனால், உன்னை என் மகளாக தான் பார்க்கிறேன். நீ தயங்காமல் என்னை அப்பாவாக நினைத்து நடிக்கலாம் என உற்சாகம் கொடுத்துள்ளார். அதன் பின்னரே அந்த சீனில் கிருத்தி ஷெட்டியால் இயல்பாக நடிக்க முடிந்ததாம். அப்போது முதல் கிருத்தி ஷெட்டி தனக்கு மகள் போல இருப்பதால், அவருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி உறுதியாக கூறிவிட்டாராம்.