Advertisement

வாயு தொல்லை நீக்கும் அற்புத மூலிகை சூப் இப்படி செய்து சாப்பிட்டால் ஆரோக்கியம் பலப்படுமே!

வாயு தொல்லை நீக்கும் அற்புத மூலிகை சூப் இப்படி செய்து சாப்பிட்டால் ஆரோக்கியம் பலப்படுமே!

வாயு தொல்லை தானே என்று சாதாரணமாக விட்டுவிட முடியாது. சிறுசிறு நோய்கள் தான் நாளை பெரிய நோய்களுக்கு காரணமாக அமையும். எனவே எந்த ஒரு சிறிய உடல் நல கோளாறையும் உடனடியாக சரி செய்து கொண்டால் நமக்கு ஆரோக்கியம் மற்றும் ஆயுள் நீடிக்கும். இன்று வயது வித்தியாசமின்றி நம் உணவு முறை மாற்றம் காரணமாக எல்லோருக்குமே வாயுத் தொந்தரவு அதிகரித்து வருகிறது. இதிலிருந்து எளிமையாக விடுபட நம் வீட்டிலேயே மூலிகைப் பொருட்களைக் கொண்டு சூப் தயார் செய்து குடித்து வரலாம். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி பயணியுங்கள்.

eating-food

பொதுவாக நாம் சாப்பிடும் பொழுது நன்கு மென்று நின்று நிதானமாக சாப்பிட வேண்டும் என்பது முறையாகும். சாப்பிட்டு முடித்த பிறகு நமக்கு ஏப்பம் வர வேண்டும். அடுத்த வேளை வரும் பொழுது தானாகவே பசி எடுக்க வேண்டும். ஆனால் ஏப்பம் வருவது தடைபட்டு வயிறு உப்புசம் ஆனால் அடுத்த வேலை நமக்கு பசி எடுக்காது. இதனால் தான் வாயுத் தொல்லை என்பது ஆரம்ப அறிகுறியாக நமக்கு சில பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது. வயிறு உப்புசம், பசியின்மை மந்தம் போன்றவை வாயுத் தொல்லையின் முதல் அறிகுறியாகும்.

சத்தான உணவு பொருட்களை நாம் எடுத்துக் கொள்ளாவிடில் நம் உடலில் தேங்கியிருக்கும் வாயுவானது நமக்கு பெரிய பிரச்சனையாக மாறும் அபாயம் உண்டு. அதுவே சத்துள்ள உணவு பொருட்களை உட்கொள்ளும் பொழுது வாய்வு பிரச்சனை ஏற்பட்டாலும் அதில் கிடைக்கும் உயிர்சத்துக்கள், கனிமங்கள், மைக்ரோ நியூட்ரிடியன்ஸ் போன்றவை கிடைத்து அதில் இருந்து தானாகவே நம்மை தற்காத்துக் கொள்ள உதவும். எனவே நாம் சாப்பிடும் உணவானது சத்துள்ளதாக இருப்பது அவசியமாகும்.

மலம் கழிக்கும் பொழுது முழுமையாக வெளியேறாமல் இருப்பது, வயிற்று பொருமல், வயிற்று உப்புசம், வாயு வெளியேறுவது போன்றவை வாயுத் தொல்லையின் அறிகுறிகளாக இருக்கின்றன. காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை சரியாக முடிப்பவர்கள் வாயு தொல்லைக்கு உட்படுவது இல்லை. இதிலிருந்து நாம் முழுமையாக விடுபட சில மூலிகைப் பொருட்களை வைத்து சூப் செய்யலாம். இந்த தொந்தரவு இருக்கும் பொழுது இதனை ஒரு கப் வீதம் தினமும் குடித்து வந்தால் இதிலிருந்து முழுமையாக விடுபட்டு விடலாம்.


மூலிகை சூப் செய்ய தேவையான பொருட்கள்:

கற்பூரவள்ளி இலை – 10, ஓமம் – 2 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், மிளகு – 4, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 4 பல், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, வெற்றிலை – நான்கு, நெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவிற்கு.

mooligai-soup

மூலிகை சூப் செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு, கற்பூரவள்ளி இலை, வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பிறகு மற்றொரு வாணலியில் கொஞ்சமாக நெய் சேர்த்து காய விடுங்கள். பின்னர் அதில் சீரகம், தனியா, மிளகு, சோம்பு, ஓமம், பூண்டு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கி பின்னர் வதக்கி வைத்துள்ள கற்பூரவல்லி இலை மற்றும் வெற்றிலையும் சேர்த்து கொள்ளுங்கள். பின் அதனுடன் 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். கொதித்து சூப் பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்து பரிமாற வேண்டியது தான்.