Advertisement

கடையில் வாங்க தேவையில்லை, ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ இனி வீட்டில் நீங்களே செய்யலாம் ரொம்ப ரொம்ப ஈஸியா!

கடையில் வாங்க தேவையில்லை, ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ இனி வீட்டில் நீங்களே செய்யலாம் ரொம்ப ரொம்ப ஈஸியா!

french-fries

எல்லாருக்குமே ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ ரொம்ப பிடிக்கும் இல்லையா? ஷாப்பிங் செல்லும் போதோ அல்லது மால் போன்ற இடங்களுக்கு செல்லும் பொழுதோ இந்த ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ நம் கண்களுக்கும், நாவிற்கும் விருந்தாக மாறுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ நாம் கடைகளில் அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதை வீட்டிலேயே செய்வதற்கு மிக மிக எளிமையான முறை இருக்கிறது. இதை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொண்டால் நினைத்த நிமிடத்தில் ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ தயாராகிவிடும். அதை எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை இப்பதிவில் நாம் இனி காணலாம் வாருங்கள்.

french-fries1

பொதுவாகவே உருளைக்கிழங்கு என்றாலே சுவை பட்டியலில் டாப் 10 இல் ஒன்றாக சேர்ந்து விடுகிறது. இது ஆரோக்கியத்திற்கு அந்த அளவிற்கு நன்மை பயப்பவை அல்ல என்றாலும் அதை நாம் ரசித்து ருசித்து உண்கிறோம். தவிர்க்கமுடியாத காய்கறி வகைகளில் உருளைக் கிழங்கும் ஒன்றாக இருந்து வருகிறது. இதில் இருக்கும் ஸ்டார்ச்சை நீக்கிவிட்டால் போதும், இதில் இருக்கும் மற்ற சத்துக்கள் உடலுக்கு நன்மை தருபவைதான். இதில் இருக்கும் அதிக அளவு கார்போஹைட்ரேட் உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.

ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் செய்வதற்கு தேவையான அளவு உருளைக்கிழங்கை வாங்கிக் கொள்ளுங்கள். கொஞ்சம் பெரியதாக இருக்கும் உருளைக்கிழங்கை தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது. உருளைக்கிழங்கின் தோலை நீக்கி ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் செய்ய தேவையான வடிவத்திற்கு அழகாக வெட்டிக் கொள்ளுங்கள். இதை சரியாக செய்ய முடியாதவர்களுக்கு அதற்கென்று பிரத்தியேகமாக பாத்திர கடைகளில் உருளைக்கிழங்கு கட்டர்கள் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

french-fries-cutter

இவ்வாறு வெட்டியவுடன் அவற்றை குளிர்ந்த நீரில் ஒரு அரை மணி நேரம் போட்டு ஊற வைக்க வேண்டும். இதனால் உருளைக்கிழங்கில் இருக்கும் ஸ்டார்ச் முழுமையாக நீங்கிவிடும். அரை மணி நேரம் கழித்து அதில் இருக்கும் உருளைக்கிழங்குகளை தனியாக எடுத்துக் கொள்ளவும். பின்னர் அவற்றை சூடாக இருக்கும் நீரில் உப்பு சேர்த்து கலந்து கொண்டு போட்டு விடவும். இந்த சூட்டிலேயே உருளைக்கிழங்கின் உள்ளே இருக்கும் பகுதி வெந்து போவதற்கு உதவி செய்யும். தனியாக வேக வைக்க வேண்டிய அவசியமில்லை. மீண்டும் ஒரு அரை மணி நேரம் கழித்து சுத்தமாக நீரை வடித்துவிட்டு உருளைக்கிழங்குகளை ஈரப்பதம் இல்லாமல் டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்துக் கொள்ளுங்கள். அல்லது சுத்தமான வெள்ளை காட்டன் துணியையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

முற்றிலும் ஈரப்பதம் நீங்கி உருளைக்கிழங்கு பொரிப்பதற்கு தயாராகிவிடும். பின்னர் மிதமான சூட்டில் எண்ணெயைக் காயவைத்து சிறிது சிறிதாக போட்டு ஒரு 15 நிமிடம் வரை பொரித்து எடுக்கவும். நீங்கள் பொரித்து எடுத்த பின் உருளைக்கிழங்கின் நிறம் மாறாது அப்படியே இருக்கும். இதுதான் சரியான பதம். இந்த உருளைக்கிழங்கை எண்ணெய் இல்லாதவாறு சுத்தமாக வற்றியதும் எடுத்து ஒரு டப்பாவில் அல்லது காற்றுப்புகாத பிளாஸ்டிக் பையில் போட்டு ரெஃப்ரிஜிரேட்டரில் ஃப்ரீசர் பகுதியில் வைத்து ப்ரீஸ் செய்ய வேண்டும்.

french-fries2

அவ்வளவுதான். இந்த முறையை பயன்படுத்தி மொத்தமாக செய்து வைத்துக் கொண்டால் நீங்கள் எப்போது விரும்பினாலும் உடனே வெளியே எடுத்து நன்கு சூடாக இருக்கும் எண்ணெயில் ஒரே நிமிடத்தில் பொரித்து எடுத்து விடலாம். ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ தயாராகிவிடும். லேசாக உப்பு தூவி பிரட்டி எடுத்தால் போதும்! இதனை தக்காளி சாஸ் தொட்டுக் கொண்டு சாப்பிடுவதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரத்தில் விரும்பி சாப்பிடும் உணவாக மாறிவிடும். இதனை வீட்டில் செய்ய தெரியாமல் அதிக விலை கொடுத்து கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட சுகாதாரமாக நம் வீட்டிலேயே செய்து கொடுத்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.