Advertisement

சைனஸ் பிரச்சனையில் இருந்து காக்கும் நொச்சி இலை

சைனஸ் பிரச்சனையில் இருந்து காக்கும் நொச்சி இலை

நம் முன்னோர்கள் பாரம்பரியமாக மருத்துவத்திற்காக பயன்படுத்திவந்த இலைதான் இந்த நொச்சி இலை. ஆனால் காலப்போக்கில் இதன் மகத்துவம் மறைந்து கொண்டே தான் போகிறது. இந்த நொச்சி இலையின் பயன்கள் ஏராளம். இந்த நொச்சி இலையை நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு, நம் முன்னோர்கள் எப்படி பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதைப் பற்றி சற்று விரிவாக காண்போமா.

 Nochi-leaf

இந்த மூலிகைச் செடிகளை ஆடு, மாடு போன்ற விலங்குகள் சாப்பிடாது. இந்த செடி வெட்ட வெளியிலும், வயல்வெளிகளில் ஒதுக்குப்புறமாக வளர்ந்து இருக்கும்.

சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமேயானால்

இந்த நொச்சி இலைகளை தூளாக நசுக்கி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவிட்டு அதில் ஆவி பிடித்து வந்தால் நமக்கு ஏற்படும் மூக்கடைப்பு, ஜலதோஷம், தலைபாரம், தலைவலி, தலையில் நீர் கோர்த்து இருப்பது இவைகள் அனைத்தும் வியர்வையாக வெளியேறிவிடும். அதுமட்டுமல்லாமல் இந்த இலைகளை சேமித்து, ஒரு துணிப்பையில் போட்டு மூட்டை கட்டி தலையணை போல தலைக்கு வைத்து தினமும் தூங்கி வந்தால் சைனஸ் பிரச்சனை வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

 Nochi-leaf

காய்ச்சலின் போது

நொச்சி இலையில் ஆவி பிடித்து வருவதன் மூலம் காய்ச்சல் படிப்படியாகக் குறையும். நொச்சி இலைகளை நீரில் போட்டு வெதுவெதுப்பாக காயவைத்து அந்த நீரில் குளித்து வர காய்ச்சலின் போது ஏற்பட்ட உடல் வலி நீங்கும்.

மிளகு, பூண்டு, கிராம்பு இவைகளை நொச்சி இலையுடன் சேர்த்து விழுது போல் அரைத்து ஒரு நெல்லிக்கனி அளவு உண்டு வந்தால் ஆஸ்துமா பிரச்சனை குணமாகும்.

 Nochi-leaf

தலைவலி

நொச்சி இலையுடன் சிறிதளவு சுக்கு, பெருங்காயம் சேர்த்து அரைத்து அந்தப் பற்றினை நெற்றி, கண்ணம், காதின் பின்பகுதி இவைகளில் தடவி வந்தால் தலைவலி குணமாகும்.

வீக்கம் நீங்க

உடல்வலி, உடலில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு நொச்சி இலையை வாணலியில் போட்டு வதக்கி ஒரு வெள்ளைத் துணியில் வைத்து மூட்டையாக கட்டி, வெதுவெதுப்பான சூட்டில் எங்கெல்லாம் வலி வீக்கம் இருக்கிறதோ அங்கு ஒத்தடம் கொடுத்து எடுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

 Nochi-leaf

கழுத்து வலி நீங்க

நொச்சி இலைச் சாற்றுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து காயவைத்து கை பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து குளித்தால் கழுத்து வலி, கழுத்தில் நெறி கட்டுதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும். நரம்பு பிரச்சனையால் சில பேருக்கு கழுத்து வலி இருந்து வரும். அந்த பிரச்சினைக்கும் இது தீர்வாக இருக்கும்.

கொசு விரட்டி

நொச்சி இலைகளை தீ மூட்டி அதில் வரும் புகையினால் கொசுக்கள் விரட்டபடுகிறது. எந்தப் பக்கவிளைவும் இல்லாத கொசு விரட்டியாக இது நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது. நொச்சி இலைகளை படுக்கும் இடத்தில் ஒரு தட்டில் போட்டு வைத்திருந்தாலே கொசுக்கள் உள்ளே வராது. வீட்டைச் சுற்றி இடம் உள்ளவர்கள் நொச்சி செடியை வளர்த்து வந்தால் பூச்சி பொட்டுகள் அண்டாமல் இருக்கும். நம் வீட்டு வாசலில் நொச்சிச் செடிகள் இருந்தால் நம் வீட்டிற்குள் வரும் தூசியினை கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

 Nochi-leaf

தானியங்களை பாதுகாக்க

நம் வீட்டில் தானிய வகைகள், பருப்பு வகைகள், அரிசி இவைகளை சேமித்து வைத்திருக்கும் ஜாடியில் இந்த நொச்சி இலைகளை போட்டு வைத்தால் புழு, வண்டு இவைகள் வராமல் இருக்கும்.

இவைகள் மட்டுமல்லாமல் இந்த நொச்சிசெடி நம் ஊர்களில் இருக்கும் ஏரிகளின் கரையோரத்தில் வளர்த்து வந்தால், கரையானது உடையாமல் வலுவாக இருக்கும். மலைச்சரிவுகளில் தானாக வளரும் இந்த நொச்சிசெடி மண் அரிப்பைத் தடுக்கிறது. அதிவேகமாக வீசப்படும் காற்றை தடுக்கும் சக்தியும் இந்த நொச்சிச் செடிக்கு உண்டு.