Advertisement

செம்பருத்தி பூவின் மருத்துவ பயன்கள்

செம்பருத்தி பூவின் மருத்துவ பயன்கள்

ஹைபிஸ்கஸ் என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இந்த செம்பருத்திப் பூவைப் பற்றி நாம் பள்ளிக்கு செல்லும்போது படித்திருப்போம். நமது ஊர்களில் பலபேர் வீடுகளின் முன்பு இந்த செம்பருத்தி செடியானது வளர்ந்து இருப்பதை கண்டிருப்போம்.  நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு இந்தப் பூவில் பல மருத்துவ சிறப்புகள் அடங்கியுள்ளது. இந்தப் பூவை நீண்ட நாட்களுக்கு முன்பு செவ்வரத்தை என்ற பெயரில் தான் அழைத்து வந்தார்கள். மலேசியாவின் தேசிய மலர் என்ற பெயரை இது கொண்டுள்ளது. இதற்கு சீன ரோஜா என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதன்காரணமாக சீனர்கள் செம்பருத்தி தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

செம்பரத்தை, செம்பருத்தி என்று இதில் இரண்டு வகைகள் இருந்தன. ஆனால் செம்பரத்தை என்ற பூ தான் இன்றைக்கு செம்பருத்தி என்ற பெயரில் மாறி நம் வழக்கத்தில் உள்ளது. உண்மையான செம்பருத்தி என்பது ஒரு பருத்தி வகைத் தாவரம். அது இப்போது அழிந்து விட்டது. இதன் மருத்துவ குணத்தை அறிந்த சித்தர்கள் இந்தப் செம்பருத்திப்பூவை தங்கபஸ்பம் என்ற பெயர்கொண்டு அழைத்து வந்தனர். இந்த செம்பருத்திப் பூவின் மகத்துவத்தை இந்தப்பதிவில் சற்று விரிவாக காண்போமா.

தோல் நோய் வராமல் பாதுகாக்க

காயவைத்த செம்பருத்தி இதழ்களுடன், ஆவாரம்பூ பாசிப்பயிறு, கருவேப்பிலை இவைகளைச் சேர்த்து பொடியாக்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினம்தோறும் குளிப்பதற்கு, சோப்பிற்க்கு பதிலாக இந்த தூளை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நம் சருமமும் பளபளப்பாக இருக்கும்.

இளநரை பொடுகு பிரச்சனை தீர

சிலருக்கு இளநரை, பொடுகு தொல்லை, முடி உதிரும் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். செம்பருத்திப்பூ இலைகளுடன் கருவேப்பிள்ளை, மருதாணி இலை இவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதேபோன்று வாரத்திற்கு இரண்டு முறை செய்துவந்தால் தலைமுடி பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இப்படி செய்து வரும்போது நம் கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும். உடம்பில் உள்ள சூடு தன்மை குறையும்.

பேன் தொல்லையிலிருந்து விடுபட

அதிக தலைமுடி உள்ளவர்களுக்கு பேன் ஈறு தொல்லை அதிகமாக இருக்கும். அப்படி உள்ளவர்கள் இரவில் தூங்கும் போது செம்பருத்திப் பூவை தலையில் வைத்துக்கொண்டு அப்படியே படுத்து உறங்கலாம். இதேபோன்று தினம்தோறும் செய்து வந்தால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

ரத்த சோகையை நீக்க

நம் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க 2, 3 செம்பருத்திப் பூக்களை நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு டம்ளர் அளவு நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும்.

காலணிகளை பாலிஷ் செய்ய

இந்த செம்பருத்தி பூவிலிருந்து காலணிகளை மெருகேற்றுவதற்காக ஒருவிதமான சாயம் எடுக்கப்படுகிறது. இதனால் இந்தப் பூவினை ஆங்கிலத்தில் ஷு ஃப்ளவர் என்ற பெயர்கொண்டு அழைத்து வருகின்றனர்.

மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்களுக்கு

மாதவிடாய் சுழற்சி சில பெண்களுக்கு சரியாக இருக்காது. மாதத்திற்கு ஒரு முறை மாதவிடாய் ஆவது பெண்களின் உடல்நலத்திற்கு நல்லது. இந்தப் பிரச்சினையை சரி செய்ய செம்பருத்தி பூவை நிழலில் காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். அந்த பொடியை ஒரு தேக்கரண்டி அளவு காலையிலும், மாலையிலும் 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியான முறையில் மாதவிடாய் வந்து விடும்.

இருமலில் இருந்து விடுபட

வாய் ஓயாமல் இருமிக் கொண்டிருப்பவர்களுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் 10, ஆடாதோடை தளிர் இலைகள் 3, இவை இரண்டையும் நசுக்கி இரண்டு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து குடித்து வர இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம். இதுபோன்று மூன்று நாட்களுக்கு காலை மாலை தொடர்ந்து குடித்து வரவேண்டும்.

எந்தப் பூவை எதற்கு பயன்படுத்தலாம்

ஒற்றை அடுக்கில் ஐந்து இதழ்களை உடைய சிகப்பான பூக்கள் மருத்துவத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அடுக்கு செம்பருத்தி என்ற பெயர் கொண்ட பல இதழ்களையுடைய பூக்களை அழகுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

செம்பருத்தி பூக்களை எப்படி சாப்பிட்டால் உடலுக்கு நன்மை சேரும்

இந்தப் பூக்களின் நான்கு ஐந்து இதழ்களை எடுத்து, இதனுடன் ஒரு நெல்லிக்காய், இரண்டு கொத்து கருவேப்பிலை, சிறிதளவு இஞ்சி துண்டு, இவைகளை சேர்த்து நன்றாக விழுதுபோல் அரைத்துக் கொள்ள வேண்டும். அந்த விழுதினை நீரில் கலந்து, வடிகட்டி அத்துடன் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்து வரலாம்.

இந்தப் பூவின் இதழ்களை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். காயவைத்த இதழ்களை எடுத்து நன்றாக பிழியும் போது எலுமிச்சை சாறுடன் சேர்ந்த செம்பருத்தி பூவின் சாரும் நமக்கு கிடைக்கும்.  நமக்கு கிடைத்த அந்த சாறை அடுப்பில் காயவைத்து கொள்ள வேண்டும். இந்த சாறை நாம் பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அத்துடன் தேன் அல்லது நாட்டு சர்க்கரையை கலந்து சாப்பிட்டு வரலாம்.