Advertisement

துத்தி மூலிகை கொண்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா?

துத்தி மூலிகை கொண்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா?

பல வகையான அதிசய உயிர் காக்கும் மூலிகைகள் நிறைந்த நாடாக நமது பாரத தேசம் இருக்கிறது. ஒவ்வொரு வகையான மூலிகை பற்றியும், அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் நமது சித்தர்கள் கண்டுபிடித்த சித்த மருத்துவ முறையில் குறிப்பிடப்பட்டுள்ளன. சில செடி வகைகள் நம் வீட்டிற்கு அருகாமையில் மிகச் சாதாரணமாக முளைத்திருந்தாலும், அது கொண்டிருக்கும் பல அற்புதமான மருத்துவ குணங்கள் என்ன என்பதை நம்மில் பலருக்குத் தெரியாது. அப்படிப்பட்ட ஒரு அற்புதமான மூலிகை செடிதான் துத்தி மூலிகை செடியாகும். இந்த துத்தி மூலிகையை பயன்படுத்தி என்னென்ன உடற்பிணிகளை நீக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

thuthi

துத்தி பயன்கள்

முக பருக்கள்

எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும், மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் முகத்தில் பருக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது முகப்பருக்கள் ஏற்படுவதால் முகத்தின் அழகு கெட்டு விடுகிறது இப்படிப்பட்டவர்கள் துத்தி செடி வேரின் மேல்பட்டையை நன்றாக அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து, நன்றாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு முகப்பருக்களின் மீது தடவினால் முகப்பருக்கள் நீங்கி விடும்.

ஆண்மை குறைபாடு 

தவறான உணவுப் பழக்கம், மலச்சிக்கல், நரம்பு தளர்ச்சி மற்றும் உடல் அதிகம் வெப்பமடைவது போன்ற காரணங்களால் இக்காலங்களில் ஆண்கள் பலருக்கு விந்து நீர்த்து போய், உயிரணுக்கள் குறைந்து குழந்தை பாக்கியம் ஏற்படாமல் போகிறது. இப்படிப்பட்ட ஆண்கள் துத்திப் பூக்களை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, பசும்பாலில் போட்டுக் மிதமான பதத்தில் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணிந்து, தாது விருத்தி ஏற்படும். விந்து உற்பத்தி அடர்த்தியாகும்.

thuthi

மூல நோய்

மூல நோய் கொண்டவர்கள் அனுபவிக்கின்ற துன்பம் மற்றவர்கள் அனுபவிக்கும் போது மட்டுமே அறிந்து கொள்ள முடியும். மூல நோய்க்கு சிறந்த மூலிகை மருந்தாக துத்தி இருக்கிறது. துத்தி இலைகளை நிழலில் காயவைத்து, பொடி செய்து வைத்துக் கொண்டு, அப்பொடியைக் காலை மாலை இருவேளை ஒரு தேக்கரண்டித் தூளைச் சாப்பிட்டு, சுடு தண்ணீர் குடித்து வந்தால் மூலம், ரத்த மூலம், உள் மூலம், மூலப் புண்கள், மூலக் கடுப்பு மற்றும் நமைச்சல் முதலிய மூலம் சம்பந்தமானஅனைத்து பிணிகளும் அகலும். நோய் முழுவதுமாக தீர சில தினங்கள் இம்மருந்தை சாப்பிட்டு வரவேண்டும்.

தோல் வியாதிகள் 

உடலின் சுகாதாரத்தில் முதன்மையாக வருவது நமது உடலில் மேற்போர்வையாக இருக்கும் தோல் சுகாதாரமாகவும், எப்போதும் சுத்தமாக வைத்துக் கொண்டால் பெரும்பாலான தோல் சம்பந்தமான வியாதிகள் ஏற்படாமல் தடுத்து விட முடியும். ஒரு சிலருக்கு கிருமித்தொற்று மற்றும் பிற காரணங்களால் படர்தாமரை, கருமேகம் போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. இவர்கள் துத்தி விதைகளை பொடி செய்து 10 கிராம் அளவில் எடுத்து கொண்டு, 120 மில்லி காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடம்பில் ஏற்பட்ட கருமேகம், படர்தாமரை நீங்கும்.

thuthi

அஜீரணம், வயிற்று போக்கு 

சாப்பிடும் உணவுகள் நன்றாக செரிமானம் ஆவது என்பது உடல் ஆரோக்கியத்திற்கான அறிகுறியாகும். ஆனால் ஒரு சிலர் நேரம் தவறி உடலுக்கு ஒவ்வாத உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் அஜீரணம் ஏற்பட்டு வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் துத்தி இலைகளை இடித்துச் சாறு தயாரித்து அதற்குச் சமமாக நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அஜீரணத்தால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு குணமாகும்.

சிறுநீர் பிரிய 

நமது உடலில் இதயத்தை போல முக்கியமான உறுப்புகளாக இரண்டு சிறுநீரகங்களும் செயல்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளில் சரியான இடைவெளியில் சிறுநீர் நன்றாக கழிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒரு சிலர் தண்ணீர் குறைவாக அருந்துவதாலும், அதீத உடல் வெப்பத்தாலும் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் எதிர்காலங்களில் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.

thuthi

மலச்சிக்கல் 

மாமிசம், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை குறைத்து, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் சரியான அளவில் தண்ணீரும் பருகி வந்தால் மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்க முடியும். அவசர யுகமான இன்றைய நாட்களில் பலருக்கும் மலம் கழிக்கக் கூட நேரமில்லாத காரணத்தால் நாளடைவில் மலச்சிக்கல் குறைபாடு உண்டாகிறது. இத்தகைய நபர்கள் துத்திக் கீரைகளை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட மலச்சிக்கல் தீரும்.

பற்கள், ஈறுகள் 

பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தமாக வைத்துக்கொள்ளாத காரணத்தாலும், உணவில் வைட்டமின் சத்துக்களின் குறைபாடு இருந்தாலும், ஜலதோஷம் ஏற்பட்டிருந்தாலும் சிலருக்கு ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு, பல் வலி போன்றவற்றை உண்டாக்குகிறது. இச்சமயங்களில் துத்தி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் இதர நோய்கள் தீரும்.

thuthi

புண்கள், வீக்கங்கள் 

உடலை அளவிற்கு அதிகமாக வருத்திக் கொண்டு செயல்பட்டால் தசைகளில் பிடிப்பு ஏற்பட்டு, வலி உண்டாகிறது. மேலும் எதிர்பாராமல் உடலில் அடிபடுவதால் புண்கள் ஏற்பட்டு, வீக்கங்கள் உண்டாகவும் செய்கிறது. இத்தகைய பாதிப்புகளை அனுபவிப்பவர்கள் துத்தி இலைகளையும், துத்திப் பூக்களையும் சம அளவில் எடுத்து, மை போல் அரைத்து வலி ஏற்படும் இடங்கள், வீக்கம் மற்றும் புண்களின் மீது பற்று போல் போட்டால் வலி குறையும். புண்கள் மற்றும் வீக்கங்கள் விரைவில் நீங்கும்.

நீர் கடுப்பு, வயிற்று உபாதைகள் 

மிக அதிகமான வெப்பத்தை வேலி இடம் கோடைக்காலங்களில் பலருக்கு வயிற்று கடுப்பு ஏற்படுகிறது மேலும் உடலில் நீர்சத்து குறைந்து நீர்க்கடுப்பு மற்றும் ரத்த பேதி போன்றவை ஏற்படுகிறது இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் சில துத்தி விதைகளை காலையில் 10 கிராம் அளவில் ஊறவைக்க வேண்டும். இதை மாலையில் சிறிது கற்கண்டு சேர்த்துச் சாப்பிட வேண்டும். இதே போல் மாலையில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட வேண்டும். இவ்வாறு சில நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் மேற்கூறிய உடல்நலக் குறைபாடுகள் விரைவில் நீங்கும்.