ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்.
ஸ்கிப்பிங் என்ற பெயரை நம் காதில் கேட்டதும் எங்கேயோ கேட்டது போல இருக்கின்றதே என்று தோன்றுகின்றதா? நாம் பள்ளியில் பயின்ற காலத்தில் விளையாடிய விளையாட்டு தான் இது. சில வருடங்களுக்கு முன்பு பெரியோர்கள், சிறியவர்கள் என்று பாரபட்சமில்லாமல் இந்த விளையாட்டினை விளையாடுவார்கள். ஆனால் தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்து வரும் இந்த நவீன காலத்தில் மறைந்துபோன விளையாட்டுகளில் இந்த ஸ்கிப்பிங்கும் ஒன்று. ஸ்கிப்பிங் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. ஒரு நல்ல உடற்பயிற்சியாகவும் இருந்தது. நாம் எல்லோரும் மறந்துவிட்ட இந்த ஸ்கிப்பிங் பயனை நினைவுக்குக் கொண்டு வருவதற்காக இந்த பதிவு.
நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எத்தனையோ வகையான உடற்பயிற்சிகள் இருந்தாலும் எளிமையான உடல்பயிற்சியாகவும், நாம் நம் வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சியாகவும் இருப்பதுதான் இந்த ஸ்கிப்பிங். இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை புதிதாக தொடங்குபவர்களுக்கு ஆரம்ப காலத்தில் சில பிரச்சனைகள் வரும். அதாவது கால், தொடைப் பகுதி, உடம்பு ஆகிய பகுதிகளில் வலி ஏற்படும். ஸ்கிப்பிங் செய்வதற்காக தொடர்ந்து பயிற்சி எடுக்கும்போது நம்மை அறியாமலேயே அதன் மீது ஒரு ஈடுபாடு ஏற்பட்டு விடும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சிறிது நேரம் ஸ்கிப்பிங் செய்வது மிகவும் ஆரோக்கியமானது. நாம் ஸ்கிப்பிங் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டால் என்ன பயன்கள் உண்டாகும் என்பதைப் பற்றி சற்று விரிவாக காண்போம்.
எடையை குறைக்க
எடையை குறைப்பதற்காக நாம் தேவையற்ற பல முயற்சிகளை மேற்கொள்வோம். சிலர் எடையைக் குறைப்பதற்காக மாத்திரை மருந்துகள் எல்லாம் சாப்பிட்டு வருவார்கள். இதனால் நமக்கு பக்க விளைவுகள் தான் மிஞ்சும். ஆனால் தொடர்ந்து ஸ்கிப்பிங் பயிற்சி எடுப்பதன் மூலம் நம் எடையானது தானாகவே குறைக்கப்படும். அதுமட்டுமல்லாமல் சீரான வளர்ச்சியும், ஆரோக்கியமும், உடல் புத்துணர்ச்சியும் இந்தத் ஸ்கிப்பிங் மூலம் நாம் பெறலாம்.
தொப்பை குறைய
ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைய தொடங்கும். தொப்பை பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் ஆண்கள் பெண்கள் இருவருக்குமே இந்த ஸ்கிப்பிங் ஒரு நல்ல பயிற்சி.
உடல் சுறுசுறுப்பிற்கு
சிலருக்கு அன்றாட செய்யும் பணியில் ஈடுபாடு இல்லாமல் சோம்பேரி தனத்தோடு செயல்படுவார்கள். இப்படி உள்ளவர்கள் தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் ஸ்கிப்பிங் செய்ய பழகிக்கொண்டால் மனக்கவலை நீங்கி, மன அழுத்தம் நீங்கி, அவர்களின் அன்றாட வேலையில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள்.
இதய ஆரோக்கியத்திற்கு
ஸ்கிப்பிங் பயிற்சியானது நின்ற இடத்திலேயே சாதாரணமாக முதலில் தொடங்க வேண்டும். பின்பு குதிக்கும் போது முழுப் பாதத்தையும் தரையில் படிய வைக்காமல் முன் பாதத்தை மட்டும் தரையில் வைத்து குதிக்க வேண்டும். இந்த பயிற்சியானது தொடர்ந்து பத்து நிமிடங்கள் வரை செய்யலாம்.
தொடர்ந்து இப்படி செய்து வந்தால் இதயம் ஆரோக்கியமாகும். உடலின் ரத்த ஓட்டமானது சீர்படுத்த படுகிறது. இதன் மூலம் நம் இதயத்துடன் நுரையீரலும் ஆரோக்கியமாக செயல்படும்.
தசைகள் சக்தி பெறும்
ஸ்கிப்பிங் செய்யும்போது இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் வலது பக்கமும் இடது பக்கமும் மாற்றி மாற்றி வைத்து குதிக்க வேண்டும். இப்படி செய்யும்போது நம் முழுப் பாதத்தையும் தரையில் பதியும்படி குதிக்கலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து 10 நிமிடம் வரை செய்ய வேண்டும்.
இப்படி செய்து வந்தால் மூட்டு வலி, கணுக்கால் வலி உள்ளவர்களுக்கு தசைகளானது வலுப்பெற்று அதிக அளவு சக்தியை பெறுகின்றது. கை கால் தொப்பை பகுதிகளில் உள்ள தசைகளும் ஆரோக்கியமாகிறது. முதுகெலும்புகள் வலிமை வாய்ந்ததாக இருக்க ஸ்கிப்பிங் பயிற்சியானது உதவுகிறது.
அழகான சருமத்திற்கு
தினந்தோறும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் பயிற்சி எடுத்து வந்தால் உங்கள் சருமமானது அழகாக மாறிவிடும். இந்த உடல்பயிற்சியானது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி சருமத்திற்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. இது மட்டுமல்லாமல் நம் உடலிலுள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறவும் இந்த பயிற்சி உதவியாக இருக்கிறது.
நீங்கள் தொடர்ந்து பத்து நிமிடங்கள் இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை செய்து வந்தால் 8 நிமிடங்களில் ஒரு கிலோமீட்டர் ஓடியதற்கு சமமானதாகும். இந்தப் ஸ்கிப்பிங் பயிற்சியினை முறையாக தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நம் ஆரோக்கியமானது மேம்படுத்தப்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நல்ல வழிகாட்டியாக அமையும்.