Advertisement

பல அறிய வகையான மருத்துவ குணங்களை கொண்ட எருக்கஞ்செடியின் மருத்துவ பயன்கள்

பல அறிய வகையான மருத்துவ குணங்களை கொண்ட எருக்கஞ்செடியின் மருத்துவ பயன்கள்

எருக்கஞ்செடி என்றாலே அந்த காலத்திலெல்லாம் வீட்டில் வளர்த்தால் அபசகுணம் என்று கூறுவார்கள். ஏனென்றால் பழைய கட்டிடங்கள், ஒதுக்குப்புறமான இடங்கள், சுடுகாடுகள் இந்த இடங்களிலெல்லாம் எருக்கஞ் செடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதனால் நாம் வாழும் வீட்டில் எருக்கஞ்செடி வளர்ந்தால் அபசகுணம் என்று நம் முன்னோர்கள் கருதுவார்கள்.

Erukkam

ஆனால் திருஎருக்கத்தம்புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர் ஆகிய திருக்கோவில்களில் எருக்கஞ்செடியானது தலமரமாக இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி அன்று எருக்கம் பூவின் மாலையை விநாயகருக்கு அணிவிக்கும் பழக்கமும் நம் வழக்கத்தில் உண்டு. வெள்ளை எருக்கம் பூவை சிவனுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்துகின்றனர். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட வழிபாடுகளில் எருக்கம்பூவிற்கு மதிப்பு உண்டு. இப்படி பலவகையான கருத்துக்களைக் கொண்ட எருக்கஞ்செடிக்கு சித்த மருத்துவ குணமும் உண்டு என்று கூறுகிறார்கள். எருக்கம்பூவிற்கு உள்ள பயன்பாடுகள் என்ன என்பதைப் பற்றியும், அதில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன என்பதைப் பற்றியும் இந்த பதிவில் சற்று விரிவாக காண்போமா.

எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் வரை நீர் இல்லாமல் வாழும் தன்மையுடையது. எருக்கஞ்செடியில் இரண்டு வகையான எருக்கஞ்செடிகள் அதிக அளவில் காணப்படுகின்றது. நீல எருக்கு, வெள்ளை எருக்கு. வெள்ளை எருக்கஞ்செடி அதிக இடங்களில் வளர்வதில்லை. நீல எருக்கஞ்செடியை அதிக அளவில் காணப்படுகின்றது. எருக்கஞ்செடியில் உள்ள முற்றிய காய்கள் வெடித்து அதில் உள்ள பஞ்சுகள் ஆங்காங்கே சிதறி மண்ணில் புதைந்து அதிலிருந்து மற்றொரு எருக்கஞ்செடி முளைக்கின்றது. யாருடைய உதவியும் இல்லாமல் தன் இனத்தை தானே வளர்த்துக் கொள்வது எருக்கஞ்செடி.

எருக்கஞ்செடியின் பயன்பாடுகள்:

ஆதி மனிதன் காலத்திலிருந்தே எருக்கஞ்செடியின் பயன்பாடு இருந்து வருகின்றது. எருக்கன் நாரை கயிறாக பயன்படுத்தி உள்ளான். இது மிகவும் உறுதியானது என்பதால் அதனை வைத்து வில்லின் நாண், மீன் வலை, இவற்றை தயாரித்து உள்ளனர். பஞ்சு தலையனையின் பயன்பாட்டிற்கு முன்னால், எருக்கம் காயிலுள்ள பஞ்சை எடுத்து தான் தலையணை செய்து பயன்படுத்தி வந்தனர்.

Erukkam

காலில் முள் தைத்தால்:

அந்தக் காலங்களில் எல்லாம் காலணிகள் இல்லாமல் நடப்பவர்களின் காலில் முள் தைத்தால், அந்த இடத்தில் எருக்கன் இலையை உடைத்து அதிலிருந்து வரும் பாலை முள் தைத்த இடத்தில் விட்டால், அந்த முள்ளானது முற்றிலுமாக வெளியேறிவிடும். இதை இன்றைக்கும் கிராமங்களில் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

விஷக்கடிக்கு மருந்து:

பாம்பு கடித்தால் கூட அந்த விஷத்தை முறிப்பதற்கு முதலுதவி சிகிச்சையாக இந்த எருக்கன் இலையை அரைத்து கோலி குண்டு அளவு விழுங்கினால் விஷம் இறங்கும். தேள் கடித்தால் இதேபோன்று சுண்டைக்காய் அளவு கொடுக்க வேண்டும். கடித்த இடத்தில் எருக்கன் இலையை வைத்து கட்டினால் விஷம் இறங்கும். இதன் பிறகு மருத்துவரிடம் செல்லலாம்.

வெள்ளருக்கம் பூ ஆஸ்துமாவை விரட்டும்:

வெள்ளை எருக்கன் பூ கிடைப்பது அரிதான ஒன்று. இந்த வெள்ளெருக்கம் பூக்களில் உள்ள நரம்புகளை நீக்கிவிட்டு, அந்த இதழ்களை மட்டும் நம் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த இதழ்களின் சம அளவிற்கு மிளகு, கிராம்பு சேர்த்து நன்கு அரைத்து, ஒரு மிளகு அளவிற்கு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் காயவைத்துக் கொள்ள வேண்டும். மூச்சிரைப்பு அதிகமாகும்போது அதில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு நீரை அருந்தினால் உடனே இரைப்பு தணியும்.

Vellerukkam

தொழுநோய்:

எருக்கன் பூவைக் காயவைத்து பொடியாக நறுக்கி, அந்த பொடியில் 200 கிராம் எடுத்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் பால்வினை நோய், தொழுநோய் குணமடையும்.

ஆறாத காயத்திற்கு மருந்து:

எருக்கன் செடியின் வேரை நெருப்பில் சுட்டு கரியாக்கி, விளக்கெண்ணெய் கலந்து நம் தோலின் மேல் பூசிவர ஆறாத காயங்களும் ஆறும். பொடுகு, படை, மூட்டுவலி, மூட்டு வீக்கம், மூலநோய்க்கு சிறந்த மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது.

நெஞ்சு சளி நீங்க:

சித்த மருத்துவத்தில் சுவாச குடோரி என்ற மாத்திரை எருக்கம் பூவின் மூலம் தயாரிக்கப்பட்டு சளி, இருமல் போன்ற நோய்களுக்கு மருந்தாக வழங்கப்படுகிறது. எருக்கன் இலைகளை எரித்து அந்தப் புகையை வாய் வழியாக சுவாசித்தால் மார்பு சளி கரையும்.

குதிகால் வெடிப்பு:

சூடாக்கிய செங்கல்லில், பழுத்த எருக்கன் இலையை வைத்து அந்த இலக்கு மேல் குதிகாலை வைக்கவேண்டும்.  இவ்வாறு ஏழு நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் குதிகால் வெடிப்பு, குதிகால் வலி சரியாகிவிடும்.

கட்டிகள் கரையும்:

எருக்கன் இலைகளை நெருப்பில் வாட்டி நம் தோல் பொறுக்கும் அளவில் உடம்பில் உள்ள கட்டிகள் மீது வைத்து கட்டினால் கட்டிகள் பழுத்து உடைந்து விடும்.

வயிறு சுத்தப்படுத்த:

எருக்கன் இலை சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர குடலில் உள்ள புழுக்கள் முழுவதுமாக வெளியேறி வயிறு சுத்தப்படுத்தப்படும். பசியைத் தூண்டும்.

காதில் சீழ் வடிந்தால்:

எருக்கன் இலையின் சாற்றுடன் பூண்டுச்சாறு 30ml, லவங்கப்பட்டை சாறு 30ml, வசம்பு சாறு 30 ml, இவைகளை நல்லெண்ணெய் ஊற்றி, அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக காய்ச்சி காதில் இரண்டு சொட்டு விட்டால் சீழ் வடிவது நின்றுவிடும். பல்லில் உள்ள சொத்தை, ஈறுகளில் புண் இருந்தால் எருக்கன் செடியின் இலையை அரைத்து அதன் மேல் பூசி வர நல்ல பலன் கிடைக்கும்.

Erukkam-Leaf

காக்கை வலிப்பு:

எருக்கன் இலையை காயவைத்து அந்தப் பொடி 30 கிராம், மிளகுத்தூள் 30 கிராம், உந்தாமணி இலைத்தூள் 30 கிராம், இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்த பொடியை மூக்குப் பொடி போடுவது போல் மூக்கில் வைத்து உறிஞ்ச காக்கை வலிப்பு வராது.

இப்படிப்பட்ட பல அறிய வகையான மருத்துவ குணங்களை கொண்ட எருக்கஞ்செடிகளை நாம் இந்த விஞ்ஞான காலத்தில் மறந்துதான் இருக்கின்றோம்.