Skip to main content

இந்துப்பிற்கு (Rock Salt) இவ்வளவு மகத்துவமா?

இந்துப்பிற்கு (Rock Salt) இவ்வளவு மகத்துவமா?

நம் அன்றாடம் உண்ணும் உணவில் சேர்க்கப்படும் பொருள் தான் உப்பு. நாம் சமைக்கும் உணவில் உப்பின் அளவு சிறிதளவு கூடினாலோ அல்லது குறைந்தாலோ அந்த உணவுப் பொருளின் ருசியானது மாறுபட்டு விடுகிறது. ஆனால் அந்த உப்பில் என்னென்ன ரசாயன பொருட்கள், எந்ததெந்த அளவு கலக்கப்படுகிறது என்பதை தெரிந்து தான் நாம் அதை உணவில் பயன்படுத்துகிறோமா? என்று கேட்டால், அதற்கான பதில் நம்மில் சிலருக்கு தெரியாது. கல் உப்பு, தூள் உப்பு, இந்து உப்பு இந்த மூன்று வகையான உப்புக்கள் பெரும்பாலும் சமையலுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நம் முன்னோர்கள் கல் உப்பையும், அயோடின் சேர்க்காத தூள் உப்பையும் பயன்படுத்தி வந்தவரை உப்பினால் நமக்கும், நம் ஆரோக்கியத்திற்கும் எந்த பிரச்சனையும் வராமல் இருந்தது.

indhu-salt

ஆனால் சமீப காலங்களில் கடல் உப்பை தினசரி உணவில் பயன்படுத்தி வந்தால் சிலருக்கு தைராய்டு உள்ளிட்ட உடல் நல பாதிப்புகள் உண்டாகும் என்று மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து தைராய்டு நோய் போக்க கடலிலிருந்து எடுக்கப்பட்ட உப்பில் அயோடினை சேர்க்க தீர்மானம் செய்தனர். அயல்நாட்டில் ஏற்படுத்திய தீர்மானத்தை நமது தேசத்திலும் பின்பற்றி அயோடின் கலக்காத உப்பை மக்கள் பயன்படுத்த தடைகளை விதித்தனர்.

இதனால் உப்பு ஆலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் உப்பில் அயோடின் அளவு குறைந்தால் ஏற்படும் அபராதத்தை தவிர்க்க அயோடின் அளவை உப்பில் அதிகரித்து, நம் உடல் நலனில் அக்கறையின்றி உப்பு விற்பனை செய்ய தொடங்கினர். ஆனால் கூடுதல் அளவு அயோடின், சோடியமானது நம் உடலுக்கு பாதிப்பை தரும் என்பதில் யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.

indhu-salt

நம் உடலுக்கு பாதிப்பை தரும் அயோடின் கலந்த உப்பினை தவிர்த்து அன்றாட உபயோகத்திற்கு எந்த உப்பினை பயன்படுத்தலாம் என்று கேட்டால், நம் முன்னோர்கள் உபயோகப்படுத்திய இந்து உப்பினை பயன்படுத்தலாம் என்று கூறுகிறது சித்த மருத்துவம்.

இந்துப்பு (Rock Salt) என்றால் என்ன?

இந்துப்பு (Rock Salt) என்பது ஒருவிதமான பாறையிலிருந்து எடுக்கப்படும் உப்பு. பஞ்சாப், ஹரியானா, பகுதிகளிலும், இமயமலை பகுதிகளில் இந்த உப்பானது மலைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இந்து உப்பானது வெள்ளை, சிவப்பு மற்றும் ஊதா நிறங்களில் காணப்படுகின்றது சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது.

இந்து உப்பின் சத்துக்கள்

சாதாரண உப்பில் இருப்பதை போலவே இந்து உப்பில் சோடியம் குளோரைடு, அயோடின் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், இரும்பு, துத்தநாகம், போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. பாறைகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு தண்ணீரிலும், இளநீரிலும் ஊற வைத்த பின்னரே இயற்கையாக விற்பனைக்கு வருகிறது.

indhu-salt

இந்து உப்பின் பயன்கள்

1. குளிர்ச்சி தன்மை உடைய இந்த உப்பினை நாம் உபயோகப்படுத்தும் பொழுது நம் பசியை தூண்டுகிறது. எளிதில் செரிமானமாகும் திறன் உள்ளது. மலம் கழிப்பதில் கடினம் இருந்தால் அதனை சரி படுத்துகிறது. மூல வியாதிகள் நீங்க இந்த உப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. நம் வயிற்றில் உள்ள குடல் உணவை நன்றாக உறிஞ்சி சத்துக்களை நம் உடலுக்கு அளிக்கின்றது.

2. இந்து உப்பினை இளஞ்சூடான வெந்நீருடன் கலந்து வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் பல் வலி ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும். நாக்கின் ருசி தன்மையை அதிகப்படுத்தும்.

3. நம் குளிக்கும் நீரில் உப்பைப் போட்டு குளித்து வர நம் உடம்பிற்கு தேவையான இரும்புச் சத்தை தருகிறது. தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

4. ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இதனால் நமக்கு நிம்மதியான உறக்கம் கிடைப்பதுடன் தைராய்டு பிரச்சினைக்கும் தீர்வாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது.

5. தொண்டை வலி மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கிறது. மூக்கு, காது, ஆஸ்துமா பிரச்சினைகளை கட்டுப்படுத்துகிறது.

6. மற்ற உறுப்புகளை விட இந்துஉப்பு நம் கண்களுக்கு மிகவும் நல்லது நம் இதயத்திற்கும் நல்லது. நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தாது.

indhu-salt

ஆயுர்வேதத்தில் பல மூலிகை மருந்து தயார் செய்வதில் இந்த இந்து உப்பு சேர்க்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த மருந்தின் வீரியம் வேகமாக உடலுக்கு சென்று வேலை செய்ய தொடங்குகிறது. அதில் சில மருந்துகளை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

1. ஆயுர்வேதத்தில் ஹிங்குவசாதி என்னும் சூரண மருந்தில் இந்து உப்பானது சேர்க்கப்படுகிறது. இந்த மருந்தினால் இதய நோய்கள், மூட்டு வலி, இடுப்பு வலி, நீங்குகிறது. பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி, ஆசனவாய் வலி போன்றவற்றையும் இது நீக்குகிறது. நெஞ்சு பிடிப்பு, சோகை, மூலம், விக்கல், மூச்சிரைப்பு, இருமல் இவற்றைக் குணப்படுத்தும் தன்மையும் இந்து உப்பிற்கு உள்ளது.

2. கந்தர்வஹஸ்தாதி எனும் கசாயத்தில் இந்து உப்பும், வெல்லமும் ஒரு சிட்டிகை சேர்த்து குடிப்பதால் நாக்கில் ருசி இல்லாமல் போகும் தன்மையும், குடல் வாய்வு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறது.

3. சிரிவில்வாதி எனும் கஷாயம் வெளி மூலம் மற்றும் உள் மூல பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கசாயமும் இந்து உப்பு சேர்த்து வழங்கப்படுகிறது. மூலத்தினால் ஏற்படும் வலி மலச்சிக்கல் போன்றவை இந்த மருந்தால் படுத்தப்படுகிறது.

4. வைஷ்வானரம் என்னும் சூரணத்தையும் இந்துஉப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சூரணத்தை ஒரு ஸ்பூன் அளவு சிறிது வெந்நீருடன் கலந்து காலை மற்றும் இரவு நேரங்களில் உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் குடித்து வந்தால்  குடல் சார்ந்த பிரச்சனைகள் சரியாகிவிடும்.

5. இந்து உப்பினால் நம் கண்களுக்கு அதிக பலன் இருப்பதால் பல ஆயுர்வேத கண் சொட்டு மருந்துகளில் இந்து உப்பு சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

இப்படி எல்லா வகையிலும் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும் இந்த இந்து உப்பானது நம் தினசரி உணவு பயன்பாட்டிற்கு மிகவும் சிறந்தது. நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த பொருட்களின் அருமை பெருமைகளை, வளர்ந்து வரும் நாகரிகத்தில் நம் பயன்பாட்டில் இருந்து மறைந்துதான் போகின்றது.

Comments