இந்தப் பொருட்களையெல்லாம் சமையலுக்காக வாங்கி, முன்கூட்டியே வீட்டில் வைக்கக் கூடாது. விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் அந்தப் பொருள்கள் என்னென்ன?
நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வந்த சில வழிமுறைகளை, மூடப்பழக்கம் என்று சொல்லி, சில நல்ல விஷயங்களைகூட நம் இஷ்டத்துக்கு தவறான முறையில் மாற்றிவிட்டோம். ஆனால் அந்த விஷயங்களை அவர்கள் எதற்காக அப்படி சொல்லி வைத்துள்ளார்கள் என்பதை சற்று சிந்தித்து இருந்தால், இன்றைய சூழ்நிலையில் நாம் எதிர்கொள்ளும் கஷ்டங்களில் இருந்து தப்பித்து இருக்கலாமோ? என்று கூட சிந்திக்க வைக்கிறது. ஏனென்றால், சில வருடங்களுக்கு முன்னால் இல்லாத பிரச்சினைகள் எல்லாம் சமீபகாலமாக அதிகப்படியாக தலை விரித்தாட காரணம் என்ன இருக்கும்? என்றாவது சிந்தித்து உள்ளீர்களா! நம்முடைய பழக்க வழக்க முறைகளை நாம் மறந்து வருவது தான் காரணம். பிரச்சினைகளில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் சற்று பின்நோக்கி செல்வதில் எந்த ஒரு தவறும் இல்லை.
நம்முடைய முன்னோர்கள் சில வகையான காய்கறிகளை முன்கூட்டியே வாங்கி சமையல் அறையில் வைத்து விட்டு, மறுநாள் காலை சமைக்கக் கூடாது என்று சொல்லி உள்ளார்கள் அது எதற்காக என்பதை பற்றியும், அந்த காய்கள் என்னென்ன என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வரிசையில் முதலில் பார்க்கப்போவது பாகற்காய். பாகற்காயை சமைக்க வேண்டும் என்று நினைத்தால் அன்றைய தினம் காலை வேளையில் வாங்கி, மதிய நேரத்திற்கு உடனடியாக சமைத்து விட வேண்டும். கசப்புத்தன்மை கொண்ட பாகற்காயை சமைக்காமல் இரவு நேரத்தில் வீட்டில் வைக்கக் கூடாது. வீட்டில் ஏற்படும் கஷ்டத்திற்கு இந்த பாகற்காயில் இருக்கும் கசப்பு, கூட ஒரு காரணமாக இருக்கக் கூடாது என்பதற்காக நம் முன்னோர்கள் நமக்காக சொல்லப்பட்ட குறிப்பு தான் இது. முடிந்தவரை பாகற்காயை சமைக்காமல் ஒரு நாள் இரவு கூட உங்கள் வீட்டில் தங்க விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
அடுத்ததாக வெள்ளை பூசணி. இந்தப் பூசணியை வீட்டில் சமைப்பதற்காக யாரும் முழுமையாக வாங்கமாட்டார்கள். அதாவது அதை வெட்டி அதில் இருந்து ஒரு துண்டு மட்டும் வாங்கி தான் வீட்டு சமையலில் பயன்படுத்துவார்கள். பொதுவாகவே இந்த பூசணியை திருஷ்டி கழிப்பதற்காக பயன்படுத்துவார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இப்படியிருக்க கெட்ட சக்திகள் அனைத்தையும் தன் வசம் ஈர்க்கும் அந்தப் பூசணியை வாங்கி, ஒரு நாள் இரவு முழுவதும் நம் வீட்டில் வைத்து விட்டோமேயானால் நம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தையும் அந்த பூசணி ஈர்த்துக்கொள்ளும். மறுநாள் காலையில் அதை அப்படியே சமைத்து உண்டால் என்ன ஆகும்? புரிகிறதா! முடிந்தவரை வெள்ளை பூசணியை வாங்கி வைத்து விட்டு மறுநாள் சமைப்பதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள். அமாவாசை அன்று நம்மில் பலபேர் வீட்டில் இந்த வெள்ளை பூசணி சாம்பார் செய்வோம். முடிந்தவரை அன்றைய நாள் காலையில் வாங்கி, அன்றைய தினமே சமைத்து தீர்த்து விடுங்கள் அதுதான் நல்லது.
அடுத்ததாக முருங்கைக்கீரை. கட்டாயம் இதை வாங்கிய அன்றைய தினமே தான் சமைக்க வேண்டும். அடுத்த நாள் எடுத்து வைத்து சமைக்கும் பட்சத்தில் வீட்டில் கஷ்டம் உண்டாகும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. நேரமின்மை காரணமாக அடுத்த நாள் சமைக்க வேண்டிய கட்டாயம் இருந்தால்கூட, வாங்கிய முருங்கைக்கீரையை சுத்தம் செய்யாமல், காம்போடு நம் வீட்டில் கட்டாயமாக இரவில் வைக்கவே கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு காரணம் என்னவாக இருக்கும்! என்று சற்று சிந்தித்துப் பார்த்தால் முருங்கைக்கீரை மரத்திலிருந்து உடைக்கப்பட்ட பின்பு, அதன் தன்மை ஒரு நாள் கழித்து மாறிவிடும்.
அதாவது முருங்கைக் கீரையில் இருக்கும் நல்ல சத்தானது குறைந்து போகும். உடலில் தேவையற்ற உபாதைகளை ஏற்படுத்தி விடும் என்பதற்காகத்தான். முதல்நாள் உடைத்த முருங்கைக்கீரையை சிலசமயம் அடுத்தநாள் சமைத்து சாப்பிடும்போது, வயிற்றுப்போக்கு வயிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆன்மீக ரீதியாக இருந்தாலும் சரி, அறிவியல் ரீதியாக இருந்தாலும் சரி. முருங்கைக் கீரையை வாங்கி முடிந்தவரை அன்றையதினமே சமைக்க பாருங்கள். இல்லாவிட்டால் அதை காம்பிலிருந்து முறையாக உறுவி, சுத்தம் செய்து உங்கள் வீட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் சில கிராமங்களில் பார்த்திருக்கலாம். முதல் நாள் மாலை நேரத்தில் முருங்கைக் கீரையை, மரத்திலிருந்து உடைத்து எடுத்து வந்து, சுத்தம் செய்து வைத்துவிட்டு, மறுநாள் காலையே சமைத்து விடுவார்கள். ஆனால் நகர்ப்புறங்களில் அப்படி இல்லை. சில நேரம் முன்னால் காலை வாங்கிய முருங்கைக்கீரையை, அடுத்த நாள் காலை சமைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். முடிந்தவரை முருங்கைக்கீரையை அன்றைய தினமே சமைப்பதுதான் நல்லது என்ற கருத்தை முன் வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.