Advertisement

சுரைக்காய் சாப்பிட்டால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா?

சுரைக்காய் சாப்பிட்டால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா?

இந்தியச் சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் காயாக சுரைக்காய் இருக்கிறது. ஆப்பிரிக்க கண்டம் தான் இந்த சுரைக்காயின் தாயகம் என கூறப்படுகிறது. ஆதிமனிதன் முதலில் பயிர் செய்த காய்கறிகளுள் இதுவும் ஒன்று. இந்த காய் தற்போது எல்லா நாடுகளிலும் பயிர் செய்யப்படுகிற ஓரு காயாக இருக்கிறது. சுவையான இந்த சுரைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

sorakkai

சுரைக்காய் நன்மைகள்

சத்து உணவு 

சுரைக்காய் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு காய் வகையாகும்.

சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன. மேலும் இதில் 96.1% ஈரப்பதமும், 0.2% புரதமும், 0.1% கொழுப்பும், 0.5% தாது உப்புகளும், 0.6% நார்ச் சத்தும், 2.5% கார்போஹைடிரேடும் இருக்கின்றன. இவை அனைத்தும் உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயப்பதாகும்.

உடல்சூடு தணியும் 

நமது நாட்டில் ஏற்படும் கோடை கால வெப்பம் நமது உடல் சூட்டை அதிகரிப்பதோடு, தோல் சம்பந்தமான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. சுரைக்காய் பக்குவம் செய்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் தாக்காமல் காப்பதோடு நமது தோலுக்கு மினுமினுப்பையும் கொடுக்கும்.

sorakkai

சிறுநீரகம் 

சுரைக்காய் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கி காய் ஆகும். சுரைக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற உதவுகிறது. எனவே, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால் சிறுநீரம் சம்பந்தமான பிரச்சனைகளில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும்.

நாவறட்சி நீங்கும் 

கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும் வறுத்த உணவு வகைகளையும் அதிகம் சாப்பிட்டவர்களுக்கு அதிகமாய் தண்ணீர்த் தாகம் எடுக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் இதே பிரச்சினை உண்டு. இவர்களுக்கு நாக்கு வறட்சி ஏற்படும் சமயம் ஒரு கப் பச்சையான சுரைக்காய் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு அருந்தினால் நாவறட்சி நீங்கும். உப்பு போடாமல் இந்த ரசத்தை அருந்தக்கூடாது.

sorakkai

பித்தத்தைக் குறைக்க 

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்கம் உண்டாகிறது. இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாகும். சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் விரைவிலேயே சமநிலைப்படும்.

கண்நோய்கள் நீங்கும் 

நமது தலையில் இருக்கின்ற ஒரு முக்கியமான உறுப்பாக கண்கள் இருக்கிறது. தற்காலங்களில் பலரும் கணினி சம்பந்தமான பணிகளில் இருப்பதால் கண் எரிச்சல், கண் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இத்தகைய கண் குறைபாடுகளை போக்க சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

sorakkai

ரத்த அழுத்தம் 

ரத்தம் அழுத்தம் நோய் இக்காலத்தில் பலருக்கும் இருக்கிறது. அதீத ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதை குறைக்க விரும்புபவர்கள் ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் அதீத இரத்த அழுத்தம் விரைவில் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

தூக்கமின்மை பிரச்சனை 

தூக்கமின்மை ஒரு மனிதனை மிகவும் அவஸ்தைக்குள்ளாகும் பிரச்சனையாகும்.தூக்கமில்லாமல் அவதிப்படுகிறவர்கள் நல்லெண்ணெயுடன் சுரைக்காய்ச் சாற்றையும் சேர்த்து இரவில் படுக்கப் போகும் போது தலைமுடிகளில் அதை விட்டு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். முடிக்கற்றைகள், தலைப்பகுதி முதலியவற்றில் சேர்ந்து ஊறும் இந்த எண்ணெய் உடனே தூக்கத்தை வரவழைத்துவிடும். சுரைக்காயின் இலைகளைச் சமைத்து உண்டாலும் தூக்கமின்மை நீங்கும்

sorakkai

மூலம் 

சுரைக்காய் நார்ச்சத்து அதிகம் கொண்டது என்பது அறிந்ததே. மலச்சிக்கல், குடலில் புண்கள் போன்றவை ஏற்பட்டவர்கள் தினமும் ஒரு வேளை சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். வயிற்றில் ஏற்படும் பாதிப்புகள், மலச்சிக்கல் போன்றவை தீரும். குறிப்பாக மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்துவ உணவாக இருக்கிறது.

கல்லீரல்

மனிதர்களின் உடலில் இருக்கும் கல்லீரல் ஒரு முக்கிய உறுப்பாகும். நமது உடலில் இருக்கும் கல்லீரல் உணவுகளில் இருக்கும் விஷத்தன்மைகளை முறித்து, உடலுக்கு நன்மையை செய்கிறது. இப்படியான கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் நாம் சுரக்காய் கொண்டு செய்யப்படும் பதார்த்தங்கள் சாப்பிட்டு வர கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும்.