Advertisement

ஒரு முறை அடை மாவை இப்படி அரைத்து, அடை தோசை சுட்டு சாப்பிட்டு பாருங்க! மாவில் இந்த ஒரு பொருளை சேர்த்து அடை சுட்டால் வீடே மணக்கும்.

ஒரு முறை அடை மாவை இப்படி அரைத்து, அடை தோசை சுட்டு சாப்பிட்டு பாருங்க! மாவில் இந்த ஒரு பொருளை சேர்த்து அடை சுட்டால் வீடே மணக்கும்.

எல்லோர் வீடுகளிலும் அடை மாவு அரைத்து, அடை தோசை சுடுவது வழக்கம்தான். இருப்பினும், ஒருசிலருக்கு, அரிசி, பருப்பின் அளவுகள் சரியான, பக்குவமான முறையில் எப்படி சேர்ப்பது என்று தெரியாது. அடை மாவில் என்னென்ன பொருட்களை எந்தெந்த அளவில் சேர்க்க வேண்டும், என்பதைப் பற்றியும், இறுதியாக நம் அடை மாவில் சேர்க்கப்படும் ஒரு பொருள் அதிக சுவையையும், மணத்தையும் ஏற்படுத்தப் போகின்றது. அது என்ன பொருள்? என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

adai-maavu

அடை மாவிற்கு தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி-200 கிராம், பச்சரிசி-125 கிராம், துவரம் பருப்பு-125 கிராம், உளுந்து-125 கிராம், கடலைப்பருப்பு-125 கிராம், பாசிப்பருப்பு-25 கிராம், வெந்தயம்-1/4 ஸ்பூன், வர மிளகாய்-6, முழு தனியா-2 ஸ்பூன், மிளகு ஜீரகம் சேர்த்து-1 ஸ்பூன், கறிவேப்பிலை -ஒரு கொத்து, பெருங்காயம்-2 சிட்டிகை, சின்ன வெங்காயம்-10

மேற்குறிப்பிட்ட அளவுகள் உங்களுக்கு சரியாக வரவில்லை என்றால், ஒரு டம்ளர் இட்லி அரிசியை எடுத்துக்கொண்டு, மற்ற பருப்பு வகைகளை எல்லாம் முக்கால் டம்ளர் எடுத்துக் கொள்ளலாம். அரிசியையும், பருப்பு வகைகளையும் முதலில் பெரிய பாத்திரத்தில் ஒன்றாக போட்டுக் கொண்டு, தண்ணீர் ஊற்றி மூன்று முறை கழுவ வேண்டும். அதன் பின்பாக நல்ல தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். (வர மிளகாய், தனியா, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இவைகளை தனியாக ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.)

onion

5 மணிநேரம் ஊறிய அரிசி, பருப்பு, வர மிளகாய், தனியா, மிளகு, சீரகம் கருவேப்பிலை, பெருங்காயம், எல்லாவற்றையும் ஒன்றாக கிரைண்டரில் போட்டு நறநற வென ஆட்டிக் கொள்ளவேண்டும். கிரைண்டரில் இருந்து அடை மாவை எடுப்பதற்கு 5 நிமிடத்திற்கு முன்பாக பத்து சிறிய வெங்காயத்தை தோல் உரித்து அந்த மாவோடு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடை மாவை மொழுமொழுவென்று அரைக்கக்கூடாது.

அரைத்து எடுத்து மாவில், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் வைக்காமல், வெளியே வைத்துவிட வேண்டும். 3 மணி நேரம் அந்த மாவு புளிக்க வேண்டும். அதன்பின்பு மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, அடை தோசை ஊற்றும் பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

adai-maavu1

தோசைக்கல்லை சூடு படுத்திய பின்பு, தோசை வார்ப்பது போல் கொஞ்சம் மெல்லிசா அடையை ஊற்றியும் சாப்பிடலாம். தடிமனான அடை தோசை வேண்டும் என்றால், அப்படியும் ஊற்றி சாப்பிடலாம். நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து அடையை சுட்டு சாப்பிடும் பட்சத்தில், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அடையை வேக வைக்கும் போது, மிதமான தீயில் தான் வேகவைக்கவேண்டும். பருப்பு வகைகள் அனைத்தும் வேக வேண்டும் அல்லவா?

நீங்கள் வீட்டில் சாதாரணமாக செய்யும் அடையை விட, சிறிய வெங்காயம் கொஞ்சம் சேர்த்து அரைத்து செய்யும் அடை வாசம் வீட்டையே தூக்கும் அளவிற்கு இருக்கும். அந்த அளவிற்கு மொறுமொறுவென்று, சூப்பரா இருக்கக்கூடிய, இந்த அடையை ஒரே ஒருமுறை, உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

adai

இதற்கு புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி மிகவும் சுவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சில பேர் அவியல் அல்லது தாளித்த வெள்ளை தயிர் வைத்தும் இந்த அடையை சாப்பிடுவார்கள். அதாவது, நம் வீட்டில் இருக்கும் தயிரை, கொஞ்சம் தண்ணீர் பதமாக கரைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயில் கடுகு, வரமிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து இந்த தயிரில் கொட்டிவிட வேண்டும். தேவையான உப்பு சேர்த்து, அடைக்கு தாளித்த தயிரை தொட்டு சாப்பிடால்! சொல்ல முடியாத சுவை இருக்கும். கேட்கும் போதே நாக்கில் எச்சில் ஊறும், மூக்கில் வாசம் வீசும் அளவிற்கு சுவையான அடை இது. உங்க வீட்டிலேயு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!