அரிப்பு நீங்க பாட்டி வைத்தியம்
மனிதர்களின் தோலானது மற்ற விலங்குகளின் தோலை விட மென்மையானதாகும். எனவே மனிதனின் வெளிப்புற தோலானது பல வகையான பாதிப்புகளை சந்திக்கிறது. அதில் ஒன்று தான் அரிப்பு ஆகும். ஒருவருக்கு அரிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பற்றியும் அதற்கான மருத்துவ முறைகளையும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
அரிப்பு எதனால் ஏற்படுகிறது
அரிப்பு ஒருவருக்கு உண்டாவதற்கு முக்கிய காரணம் வெளிப்புற சூழ்நிலைகளில் இருக்கும் நுண்ணுயிரிகளின் தாக்குதலே ஆகும். அடிக்கடி குளித்து உடலை தூய்மை செய்து கொள்ளாதவர்களின் உடலில் வியர்வை ஈரப்பதம் மிக்க இடங்களில் நுண்ணுயிரிகள் பல்கி பெருகி அரிப்பு மற்றும் அதன் அடுத்த கட்ட பாதிப்புகளான சொறி, படர் தாமரை போன்றவை ஏற்படுகின்றன.
குப்பைமேனி
நம் இருப்பிடத்திற்கு அருகாமையில் சாதாரணமாக வளரும் அற்புத மூலிகை குப்பைமேனி. இந்த செடியின் இலைகள், சிறிது மஞ்சள், சிறிது கல்லுப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து அரிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி அது காய்ந்த பின் குளித்து வர அரிப்பு குணமாகும்.
வேப்பிலை
வேப்பிலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதனுடன் 3 வெங்காயம் சேர்த்து அரைத்து அரிப்புள்ள இடங்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து இதமான வெந்நீரில் குளித்து வந்தால் அரிப்பு நீங்கும்.
நன்னாரி
20 கிராம் நன்னாரி வேரை அரை லிட்டர் தண்ணீரில் நன்றாக காய்ச்சி, அது 200 மில்லி அளவாக சுண்டியதும் காலையில் 100 மில்லி மாலையில் 100 மில்லி அளவு குடித்து வர அரிப்பு உள்ளிட்ட அனைத்து விதமான தோல் வியாதிகளும் நீங்கும்.
அருகம்புல்
அருகம் புல் ஒரு அற்புதமான மூலிகையாகும். இந்த புற்களை அரைத்து சாறாக குடித்தும், அதில் சில துளிகளை அரிப்புள்ள இடங்களில் பூசி வரவும் அரிப்பு குணமாகும்.
கற்றாழை
கற்றாழை பல மருத்துவ குணங்களை கொண்ட ஒரு தாவரம். இதன் வெளிப்புற தோலை நீக்கி உள்ளே கொழகொழவென இருக்கும் பகுதியை எடுத்து தோலில் பாதிப்பேற்பட்ட இடங்களில் பூச அரிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.