சோற்று கற்றாழை பயன்கள்
உலகெங்கிலும் மனிதர்களின் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் மூலிகை செடிகள் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றன. சில தாவரங்கள் ஒரு குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே வளர்கின்றன. மற்ற சில மூலிகை தாவரங்கள் உலகின் பல பகுதிகளிலும் இருக்கின்றன. பழநெடுங்காலமாகவே “சோத்து கற்றாழை” பல வெப்ப மண்டல நாடுகளில் மருந்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த கற்றாழையின் வேறு பல பயன்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.
சோற்று கற்றாழை பயன்கள்
சரும பாதுகாப்பு
கோடைகாலங்களில் நமது உடலில் வெப்பத்தால் சுட்டெரிக்கப்படுவது நமது சருமம் தான். சூரிய ஒளியில் இருக்கும் புற ஊதா கதிர்கள் அதீத அளவில் நமது தோலில் பட்டுக்கொண்டிருக்கும் போது நம்மில் பலருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் மற்றும் தோல் புற்று ஏற்படுவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. கற்றாழை சாறு அல்லது கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணையை கோடைகாலங்களில் நமது மேற்புற தோலில் பூசிக்கொள்வதால் சரும நோய்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க முடிகிறது.
புண்கள்
நமது உடலில் ஏற்படும் ரத்த காயங்கள் ஆறும் போது புண்களாக மாறுகிறது. இக்காலத்தில் அப்புண்களில் நோய் தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். கற்றாழை எண்ணெய் அல்லது கற்றாழை தண்டுகளில் இருந்து கிடைக்கும் ஜவ்வு போன்ற படலத்தை புண்களின் மீது தடவி வருவதால் புண்கள் சீக்கிரமாக ஆறுவதோடு மட்டுமில்லாமல், அழுத்தமான தழும்புகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
முகஅழகு
பெண்கள் அனைவருமே தங்களின் முக தோற்றம் பொலிவுடன் இருக்க இன்றைய காலத்தில் தீமை உண்டாக்கும் ரசாயனங்கள் அதிகமுள்ள அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகின்றனர். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தோல் நீக்கிய கற்றாழை தண்டுகளை நன்கு அரைத்து, முகம் முழுவதும் பூசி கால் மணிநேரம் அல்லது அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மை நீங்கி முகம் பொலிவு பெறும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வடுக்கள் மறையும்.
பற்கள் மற்றும் ஈறுகள்
நமது உடலில் மற்ற உறுப்புகளை போலவே மிகவும் முக்கியமான உறுப்புக்கள் பற்கள் மற்றும் ஈறுகள். ஈறுகள் மற்றும் பற்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியமாகும். தோல் நீக்கிய கற்றாழை தண்டுகளை சிறிதளவு மென்று சாப்பிட்டு வந்தால் ஈறுகள் பலம் பெறும். பற்களில் சொத்தை ஏற்படுத்தும் கிருமிகளை அழிப்பதிலும் கற்றாழை உதவுகிறது.
மலச்சிக்கல்
தினசரி மலம் கழிப்பவர்களுக்கு உடலில் நோய்கள் ஏதும் ஏற்படாது. ஆனால் இன்று பலருக்கும் தவறான உணவு முறைகள் மற்றும் வாழ்கை முறைகளால் மலச்சிக்கல் ஏற்பட்டு அவர்களை பாடாய்படுத்துகிறது. தினமும் காலையில் சிறிதளவு தோல் நீக்கிய கற்றாழையை ஜூஸ் போட்டோ அல்லது அப்படியே மென்று சாப்பிட்டு வந்தாலோ மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல்கள் போன்ற ஜீரண உறுப்புகளில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
நச்சுநீக்கி
கற்றாழை பல்லாண்டுகளாகவே சிறந்த மருத்துவ மூலிகையாக நமது சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. கற்றாழையில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் நச்சுத்தன்மை நிறைந்த ரசாயனங்களை செயலிழக்கச் செய்யும் தன்மை கொண்டதாகும். கற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல்நலத்தை மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்த அளவில் பெற்றவர்கள் ஆகின்றனர். கற்றாழை இருக்கும் சத்துக்கள் உடலில் நைட்ரிக் ஆக்சைட், சைட்டோகைனின் போன்ற வேதிப்பொருட்களின் உற்பத்தியை நமது உடலில் அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குழந்தைகள், முதியவர்கள் சரியான விகிதத்தில் கற்றாழை பயன்படுத்துவது அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
உடல் குளிர்ச்சி
கோடைகாலங்களில் பலருக்கும் உடலில் வெப்பம் அதிகரித்து அவர்களுக்கு உடல் அசதியை ஏற்படுத்துகிறது. கற்றாழை தண்டுகளை தோல் நீக்கி, மிக்சியில் போட்டு நன்கு அடித்து கற்றாழைஜீஸ் தயாரித்து, அதில் சிறிதளவு நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணியும். சிலருக்கு கோடைகாலங்களில் ஏற்படும் நீர்சுருக்கு அல்லது மூத்திரசுருக்கு போன்ற பிரச்சனைகளும் நீங்கும். உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
நீரிழிவு நோய்
அமெரிக்க நாட்டில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் படி கற்றாழை தண்டுகளை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது சாப்பிட்டு வந்ததில் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர். நம் நாட்டில் நெடுங்காலமாகவே நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை சாறு மருந்தாக உட்கொள்ள நமது பாரம்பரிய மருத்துவத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
புற்று நோய்
கற்றாழை நச்சுத்தன்மைகளை எதிர்த்து போராடி அவற்றை அழிப்பதில் சிறப்பாக செயலாற்றுகிறது என்பதை நாம் ஏற்கனவே அறிந்து கொண்டோம். மனிதர்களுக்கு பல காரணங்களால் அவர்களின் உடலில் உண்டாகும் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளரக்கூடியவை. இத்தகைய தீமையான செல்களை அழித்து, ஆரோக்கியமான செல்களை உடலில் வளர்ச்சி பெற செய்யும் ஆற்றல் கற்றாழைக்கு உண்டு. எனவே புற்று நோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கற்றாழையை மருத்துவ உணவாக பயன்படுத்துவது நல்லது.