Advertisement

சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் பயன்கள்

சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் பயன்கள்

வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்திற்காகவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காகவும் உடற்பயிற்சிக்கு என்று தனியாக நேரம் ஒதுக்கி, பயிற்சி மேற்கொண்டாலும் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது. ஆனால் பல வருடங்களுக்கு முன்பு உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு காரணமாக சைக்கிளும் இருந்தது. நம் அனைவராலும் உபயோகப்படுத்தப்பட்ட சைக்கிள், நவீன காலகட்டத்தின் முன்னேற்றத்தினால் சைக்கிளின் உபயோகத்தை நாம் குறைத்து விட்டோம். தற்போது மோட்டார் இருசக்கர வாகனங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றோம். மோட்டார் வாகனங்கள் வெளியிடும் புகையினால் நம் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. ஆனால் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் நமக்கு என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை அறிந்து கொண்டால் இந்த சைக்கிள் பழக்கத்திற்கு நாம் திரும்பவும் சென்றுவிடுவோம். சைக்கிள் ஓட்டுவதினால் என்னென்ன பயன்கள் உண்டு என்பதை பற்றி இந்த பதிவில் சற்று விரிவாக காண்போம்.

cycling

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு

சில குழந்தைகள் படிப்பில் ஆர்வம் இல்லாமல் சோம்பேறித்தனமாக காணப்படுவார்கள். இதற்கு காரணம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியமாக இல்லாததுதான். நல்ல உடற்பயிற்சியை எடுப்பதன் மூலம் குழந்தைகளின் மூளை நன்றாக வேலை செய்யும். அந்த உடற்பயிற்சியானது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டும் போது நம் பிள்ளைகளுக்கு கிடைக்கிறது. இதனால் மூளை வேகமாக இயங்கி குழந்தைகள் தங்களது செயல்பாட்டில் சுறுசுறுப்பாக ஈடுபடுவார்கள்.

நீண்ட ஆயுளுடன் வாழலாம்

பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்கள் எல்லாம் சராசரியாக 80 வயதிற்கு மேல் ஆரோக்கியமான ஆயுளை பெற்றிருந்தார்கள். தற்போதெல்லாம் 70 ஆண்டுகள் வாழ்வதற்கே அதிக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இதற்கு காரணம் நாம் சைக்கிளை மறந்துவிட்டு மோட்டார் சைக்கிள், கார், பஸ்களில் செல்வதும் ஒரு காரணம் என்று பிரான்சில் நடந்த ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

cycling

எதிர்மறை ஆற்றல் நீங்கும்

பொதுவாக சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். மன மகிழ்ச்சியின் காரணமாக அவர்கள் புத்துணர்ச்சி அடைகின்றனர். புத்துணர்ச்சியின் மூலம் நம் உடம்பில் சுரக்கும் ஹார்மோன்கள், மனதை தெளிவுபடுத்தி எதிர்மறை எண்ணங்கள் வரவிடாமல் தடுத்து, நம் வாழ்க்கையை பாசிட்டிவ் எனர்ஜி என்று சொல்லப்படும் நேர்மறை எண்ணத்தோடு வழிநடத்திச் செல்லும்.

புற்றுநோயை தடுக்கிறது

அமெரிக்காவில் நடந்த ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் உடற்பயிற்சியின் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடுத்தர வயது கொண்டவர்களுக்கு குடல் சார்ந்த புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக காணப்பட்டது. நம் உடலின் எடையை சீராக பராமரிக்க சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி ஆகும். நம் உடலின் எடை அதிகமாக்கபடும் போது தான் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்ளும் ஏற்படுகிறது.

cycling

கொழுப்பு குறையும்

நம் உடம்பில் எடை ஏறுவதற்கு நாம் உண்ணும் உணவு பொருட்களில் உள்ள கொழுப்புச்சத்து ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால் நம் உடம்பில் சேரும் இந்த கொழுப்பினை சைக்கிள் ஓட்டுவதன் மூலம் குறைத்துவிடலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கொழுப்பு சத்துள்ள பொருட்களை உண்ணாமல் இருந்தால் கூட கொழுப்புச் சத்தானது அவர்களுக்கு அதிகரித்திருக்கும். இதனை உடற்பயிற்சி செய்வதன் மூலம் குறைத்துவிடலாம் என்கிறது மருத்துவம். அதிக வியர்வை வெளியேறுவதன் மூலமாகவும் கொழுப்புச்சத்து குறையும்.

அழகான தோற்றம்

சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உடம்பில், கால் தசைகள், தொடைப்பகுதியில் உள்ள தசைகள், எலும்புகள், முதுகு தண்டுவடம், இடுப்புப்பகுதி தொப்பை பகுதி போன்றவை வலிமை பெற்று கட்டுக்கோப்பாக காட்சி அளிப்பதன் மூலம் அனைவரையும் வசீகரிக்கும் தோற்றத்தை பெறலாம்.

cycling

இதயத்திற்கு நல்லது

சைக்கிள் ஓட்டுவதால் நம் இதயமும் ஆரோக்கியமாக இருக்கிறது. உடற்பயிற்சியில் மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் 1500 பேரை வைத்து சோதனை செய்துள்ளனர். இதில் 31 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் வரும் வாய்ப்பு சைக்கிள் ஓட்டுவதன் மூலம் குறைந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கர்ப்பிணி பெண்கள்

வெளிநாட்டில் உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் கூட சைக்கிளை ஓட்ட மருத்துவர்கள் ஆலோசனை அளிக்கின்றார்கள்.

இனிவரும் காலத்தில் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளும், கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகத்திற்கு செல்பவர்களும் சைக்கிளை பயன்படுத்தி வரலாம். சைக்கிளை ஓட்டும்போது கையுறை, ஹெல்மெட், காலணி, அணிந்து கொள்வது அவசியம். நமக்கு அடுத்து வரும் தலைமுறையாவது உடல் நலத்தை பேணிக் காக்கவும், நம் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், இந்த சைக்கிளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.