முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் உங்களது அழகை குறைக்கின்றதா? இந்த முறையை பின்பற்றினால், கரும்புள்ளிகளால் ஏற்பட்ட அடையாளம் கூட மறைந்து விடும்.
முகம் என்றாலே அது, மாசு மரு இல்லாமல், பிரகாசமாக இருக்கவேண்டும் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள். இது எல்லோருடைய கனவாகவும் இருக்கும். கவலை வேண்டாம்! கனவை நிறைவேற்றி விடலாம். முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகளையும், தழும்புகளையும் நீக்குவதற்கு எத்தனையோ செயற்கையான பொருட்களை பயன்படுத்தி, பலன் இல்லாமல் நிற்கின்றோம். இயற்கையாக கிடைக்கும் பொருளை வைத்து முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகளையும், தழும்புகளையும் சுலபமாக நீக்கிவிடலாம். அந்த இரண்டு பொருட்கள் என்னென்ன? அந்த பொருட்களை முறையாக எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளையும், தழும்புகளையும் நீக்குவதற்கு உருளைக்கிழங்கும், கற்றாழைச் செடியின், உள்ளே இருக்கும் ஜெல் மட்டுமே போதுமானது. பாதி அளவு உருளைக்கிழங்கை நன்றாக தோல் சீவி விட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முடிந்தால் மிக்ஸியில் போட்டு அரைத்து, விழுதாக செய்து கொள்ளலாம். மிக்ஸியில் நன்றாக விழுதாகாது என்றால், வீட்டில் இருக்கும் சிறிய உரலில் நன்றாக கைகளாலேயே இடித்து, பேஸ்ட் போல் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உருளைக்கிழங்கு விழுதானது மீதம் அடைந்து விட்டால், அதை எடுத்து வைக்க முடியாது. ஒவ்வொரு முறையும் இதை புதியதாக தான் (ஃபிரஷாக) செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிதளவு உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு அரைத்தால் நன்றாக அரைபடாது அல்லவா?
அதன் பின்பு கற்றாழை செடியில் இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து, இந்த உருளைக்கிழங்கு விழுதோடு சேர்த்து, நன்றாக கலக்க வேண்டும். இந்த விழுதை முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி வட்ட வடிவத்தில் 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்பு 10 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக கழுவி விடலாம். மொத்தமாக இந்த விழுது உங்கள் முகத்தில் 20 நிமிடங்கள் இருப்பது நல்லது. தொடர்ந்து இதைச் செய்து வரும் பட்சத்தில் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் இருந்த இடமே புலப்படாமல், காணாமல் போய்விடும்.
நம்முடைய முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க உருளைக்கிழங்கு ஒரு இயற்கையான மருந்து. சில பேருக்கு முகம் எண்ணெய் வடிந்து கொண்டே இருக்கும். எண்ணெய் வடிவத்தை கட்டுப்படுத்தி முகத்தை உலர்வாக வைக்க, இது உதவியாக இருக்கும். முகம் வறட்சி அடைந்து விடும் என்ற பயமும் வேண்டாம். முகத்தில் உள்ள தேவையற்ற மாசுக்களை நீக்கி, முகத்தை பொலிவாக வைத்திருக்கவும் இந்த உருளைக்கிழங்கு மிகவும் சிறந்தது.
இதில் கலக்கப்படும் கற்றாழை ஜெல் (அலோவேரா ஜெல்) முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ளும். வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ளும். இதில் எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்த தேவையான உருளைக்கிழங்கையும் நாம் சேர்த்து இருக்கின்றோம். முகத்தில் ஈரப்பதம் குறையாமல் இருக்க கற்றாழை ஜெல்லையும் சேர்த்து இருக்கின்றோம் என்பதால், முகத்தில் வறட்சித் தன்மையும், ஈரப்பதமும் சமமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
வரட்சியான சருமம் உடையவர்களும் இதை பயன்படுத்தலாம். எண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்களும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் கூடிய விரைவிலேயே உங்களது முகம் பொலிவு பெறும். தேவையற்ற சுருக்கங்கள் மறையும். முகத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விட்ட பின்பு வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் இதை பயன்படுத்தி வந்தால், சருமம் எப்போதும் இயற்கையாகவே அழகாக மாறிவிடும். எந்த ஒரு செயற்கை சாதனங்களை வைத்தும் முகத்தை அழகு படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது.